1 வாக்கில் வென்ற தவெக வேட்பாளருக்கு எதிரான வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு

1 hour ago 11

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனர். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கை, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அந்த வாக்கை மீட்டு, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் கணக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை சீனிவாச சேதுபதி, 17-வது சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என கோரி, திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய விடுமுறை கால அமர்வில், அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெரிய கருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர், சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதி தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அங்கு அந்த வாக்கை, திருப்பத்தூர் மாவட்ட திருப்பத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளதாகவும், அந்த வாக்கை சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பியிருக்க வேண்டும். செல்லத்தக்க அந்த வாக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளை பெற்றிருப்பர். குலுக்கல் மூலம் வெற்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்தால் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏதேனும் நடைமுறை வகுத்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பெரியகருப்பன் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், இதுசம்பந்தமாக எந்த நடைமுறையும் இல்லை. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்கள் அளித்தும் எந்த பதிலும் இல்லை எனத் தெரிவித்தனர்.

தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, வி.ராகவாச்சாரி ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை கோரி எப்படி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டால், அவரை கடமையாற்ற அனுமதிக்க வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்க முடியாது. தடை விதித்தால், மக்கள் உரிமை பாதிக்கப்படும் என்றனர்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.தருண், இதுசம்பந்தமாக தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். தபால் வாக்குகள் இந்திய தபால் துறை மூலம் அனுப்பப்படுவதில்லை. தபால் வாக்குகளை பெற தேர்தல் ஆணையம், துணை தாசில்தாரர் அந்தஸ்து அதிகாரியை நியமிக்கும். அந்த அதிகாரி தபால் வாக்குகளை பெற்று, சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார். அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதில் அமர்த்தப்படுவதால் எந்த தவறும் நடக்காது. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பி விட்டால், என்ன செய்ய வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் வழக்கு தாக்கல் செய்யும் வரை தேர்தல் தொடர்பான ஆவணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றார்.

இதையும் படிங்க: 'வந்தேமாதரம்' பாடலுக்கு முதலிடம்... தவறுக்கு காரணமானவர்கள் யார்? - இந்திய கம்யூ. கேள்வி

தபால் வாக்கை வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்து திமுக வேட்பாளரின் புகாருக்கு பதிலளிக்காதது ஏன்? ஒரு வாக்காக இருந்தாலும் பதிலளிக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், அதற்கான காரணங்களை விளக்கி நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Read Entire Article