Exclusive | “ராகுல் காந்தி என்னை தேர்வு செய்துள்ளார்… செல்வப்பெருந்தகைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை” - விஸ்வநாதன்

23 hours ago 10

Last Updated:Apr 05, 2026 9:31 PM IST

“செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் கருத்துக்களுக்கு இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை. இதையெல்லாம் கடந்து செல்வது தான் நாகரிகம்” என காங்கிரஸ் மேலூர் வேட்பாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

News18
News18

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் மேலூர் நீங்கலாக 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று மேலூர் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது; “2009ல் கடைசியாக அறிவிக்கப்பட்டதை போலவே, இப்போதும் பாரம்பரியமிக்க மேலூர் தொகுதிக்கும் கடைசியாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி. பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்த என்னை தமிழக வரலாற்றில் மேலூர் பொது தொகுதி வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டுள்ளேன்.

இந்திய கிராமங்களின் தலைநகராக இருக்கிற மதுரை - மேலூரில் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலமாக பட்டியலின மக்கள் பொது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதனடிப்படையில் தான் நான் விடுத்த கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்தில் என்னுடைய ஆடியோவை கேட்டு என்னை ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் இயக்கத்தின் பாரம்பரியமிக்க அடித்தளம் மிக்க தொகுதி மேலூர். இது காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை உறுதி செய்யும் தேர்தலாக இருக்கும். காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் இல்லை. என்னுடைய கோரிக்கையின் காரணமாகவே இந்த அறிவிப்பு தாமதமானது.

காங்கிரஸ் கட்சியில் வேற்றுமை பல உண்டு, ஆனாலும் நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம். தியாகசீலர் கக்கன் பிறந்த மண் மேலூர். கக்கனுக்கு 100வது ஆண்டு விழா எடுத்தவன் நான். நான் மேலூரை தேர்ந்தெடுத்தது சாலச் சிறந்தது. செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் கருத்துக்களுக்கு இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை. இதையெல்லாம் கடந்து செல்வது தான் நாகரிகம் என நினைக்கிறேன்.

யாருக்கும் மனமாச்சரியம் இருக்க வாய்ப்பில்லை. யாரையும் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. கூட்டம் சேர்க்கிற தலைவரை (விஜய்) விட, வலுவான கூட்டணி அமைத்திருக்கிற தலைவர் (ஸ்டாலின்) தான் வெற்றி பெறுவார். காங்கிரஸ் கட்சி பார்க்காத கூட்டமா? திமுக பார்க்காத கூட்டத்தையா, விஜய் பார்த்துவிட்டார்? இது புதுசு. நாங்கள் ஆலமரம். வலுவான அடித்தளம், அனுபவம் பெற்றுள்ள இயக்கம். நாங்கள் தான் வெல்வோம்” எனத் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

Exclusive | “ராகுல் காந்தி என்னை தேர்வு செய்துள்ளார்… செல்வப்பெருந்தகைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை” - விஸ்வநாதன்

Read Entire Article