SI Exam | 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு!

16 hours ago 8

Last Updated:Dec 21, 2025 11:24 AM IST

SI Exam | தமிழ்நாடு முழுவதும் 46 மையங்களில் 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 14 மையங்களில் 13 ஆயிரத்து 980 தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வர்கள் அனைவரும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

News18
News18

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று தேர்வெழுதி வருகின்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வாயிலாக காவல்துறைக்கு 1,299 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், ஒரு லட்சத்து, 78 ஆயிரத்து 390 பேருக்கு நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இன்று இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறுகிறது. முதல் கட்டமாக காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும், 46 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டத்தில் 14 மையங்களில் 13 ஆயிரத்து 980 தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வர்கள் அனைவரும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் நபர்கள் செல்போன், டிஜிட்டல் வாட்ச் உள்ளிட்டவற்றை கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை, தமிழ் மொழி தகுதிக்கான எழுத்துத் தேர்வும் நடைபெற உள்ளது. இந்த முறை, காவல்துறை ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவினருக்கு, ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் மட்டும் உடற் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.

First Published :

Dec 21, 2025 11:24 AM IST

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

SI Exam | 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு... தமிழகம் முழுவதும் 46 மையங்களில் தேர்வு!

Read Entire Article