TVK: `கீதை' சர்ச்சை; மன்மோகன், மோடி சந்திப்பு; `அணில்' பின்கதை! - முதல்வராகும் முன்பு VIJAY அரசியல்!

9 hours ago 15

`சி.ஜோசப் விஜய் எனும் நான்...' - இந்த வாக்கியத்தை கேட்கத்தான் கடந்த நான்கு நாள்களாகக் காத்துக் கொண்டிருந்தார்கள் விஜய்யின் தொண்டர்கள். பெரும்பான்மை இல்லாததால் பெரும் போராட்டத்துக்குப் பிறகு, இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் விஜய்!

1992-ம் ஆண்டு வெளியான `நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான விஜய், முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று தமிழ்நாட்டின் நாளைய தீர்ப்பை எழுதத் தயாராகிக் கொண்டிருக்கிறார். விஜய்யின் அரசியல் எங்கே... எப்படித் தொடங்கியது..?

விஜய்

விஜய்

கீதை

2003-ம் ஆண்டு, `கீதை' என்ற பெயரில் படமொன்றில் நடித்திருந்தார் விஜய். `இந்துக்களின் புனித நூலான கீதையை எப்படி விஜய் படத்துக்கு பெயராக வைக்கலாம்' என இந்துத்துவா ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்க, `புதிய கீதை' என மாறியது படத்தின் பெயர். முதன் முதலாக விஜய்யைச் சீண்டிய அரசியல் சர்ச்சை இதுதான்!

Vijay - Manmohan Singh

Vijay - Manmohan Singh

தொடர்ந்து தனது பாணி சினிமாக்களில் தடம் பதித்து திரைத்துறையில் விஜய் முன்னேற, 2006-ம் ஆண்டு, மீண்டும் அவர்மீது விழுந்தது அரசியல் வெளிச்சம். அந்த ஆண்டு, மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட பொங்கல் சிறப்பு தபால் தலையை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பெற்றுக்கொண்டார் விஜய்.

மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு அவரை அழைத்துச் சென்றது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். அந்தக் காலகட்டத்தில், விஜய்யும் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் தி.மு.க-வுடன் நல்லுறவிலேயே இருந்துவந்தனர்.

2008-ம் ஆண்டு, இலங்கையில் ஈழப் போர் உச்சம் பெற்றிருந்தது. சிங்களப் பேரினவாத அரசு கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்தது. இதை எதிர்த்து சென்னையில், ஒரு நாள், தனது ரசிகர்களுடன் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் விஜய். மாநிலம் முழுவதும் 37 மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

``என் ரசிகர்கள், `ஈழத்தில் போர் நிறுத்தம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்; அங்கே தமிழ் மக்கள் காக்கப்பட வேண்டும்' என்று எழுதி பிரதமருக்குத் தந்தி அனுப்புங்கள். என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழின உணர்வுள்ள அத்தனை பேரும் இதைச் செய்யுங்கள். ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கட்டும்'' என்றார் விஜய். இந்த நகர்வுகள் இலங்கைத் தமிழர்கள் மனதில் விஜய்க்கு தனி இடத்தைப் பிடித்துத் தந்தன!

2009, ஜூலை 26-ம் தேதியன்று தனது ரசிகர் மன்றங்களை `மக்கள் இயக்கமாக' மாற்றினார் விஜய். மக்கள் இயக்கத்துக்காக `உழைத்திடு உயர்ந்திடு... உன்னால் முடியும்' என்ற வாசகத்தோடு கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார் விஜய். இந்த நகர்வுதான் விஜய்யின் அரசியல் விருப்பத்தை தமிழ்நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. பல கட்சிகளும் அவரைத் தங்கள் பக்கம் இழுக்க வலைவீசின. ஆனால், எந்த வலையிலும் சிக்காத விஜய்யின் மக்கள் இயக்கம் தனித்தே இயங்கியது.

vijay makkal iyakkam

vijay makkal iyakkam

அடுத்த சில மாதங்களில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார் விஜய். இது அப்போதைய முதலமைச்சரான கருணாநிதிக்கும், தி.மு.க-வினருக்கும் கோபத்தை உண்டாக்கியதாகச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2010-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான `காவலன்' படத்திற்கு தி.மு.க முட்டுக்கட்டை போட்டது.

படம் வருமா வாராதா என்று திரையரங்கங்களுக்கு வெளியில் எக்கச்சக்க ரசிகர்கள் காத்திருக்க, படத்தின் ரிலீஸ் தேதி ஒருநாள் தள்ளிப்போனது. அடுத்த நாளும் மதியக் காட்சிகளிலிருந்துதான் படம் வெளியானது.

இந்தச் சம்பவத்துக்குப் பின், நீண்ட கால தி.மு.க அனுதாபியான விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அ.தி.மு.க-வின் பக்கம் சாய ஆரம்பித்தார். 2011 சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கியது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஜெயலலிதாவை நேரில் சந்தித்தார். சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வை ஆதரிப்பதாக அறிவித்தது விஜய் மக்கள் இயக்கம். அ.தி.மு.க பலவீனமாக இருக்கும் சில தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தி.மு.க-வுக்கு எதிராகத் தீயென வேலை செய்ததாக பரவலாக அரசியல் நோக்கர்களால் பேசப்பட்டது.

vijay, Jayalalithaa and S. A. Chandrasekhar

vijay, Jayalalithaa and S. A. Chandrasekhar

ஜெயலலிதா முதல்வர் பதவியேற்ற பின் மீண்டும் அவரை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பூங்கொத்து வழங்கி எஸ்.ஏ.சி-யும் விஜய்யும் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சி இப்படிச் சொன்னார்...

ராமாயணத்தில் ராமருக்கு அணில் உதவியது போல... அ.தி.மு.க வெற்றிக்கு நாங்களும் அணில் போல உதவி செய்திருக்கிறோம்.

எஸ்.ஏ.சி

எஸ்.ஏ.சி கொடுத்த இந்தப் பேட்டிக்குப் பிறகுதான் விஜய் ரசிகர்களை சமூக வலைதளங்களில் `அணில்' என்று அழைக்கும் டிரெண்ட் ஆரம்பமானது.

``ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திவிட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் தம்பி விஜய்''

இதைத் தொடர்ந்து பட விழா ஒன்றில் கலந்துகொண்டார் விஜய். அந்த விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் ``ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திவிட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் தம்பி விஜய்'' என்றார். சீமானின் இந்தப் பேச்சு அ.தி.மு.க-வினரை கொதிப்படையச் செய்தது.

Velayudham

Velayudham

இதற்கிடையில் தன்னை ஆளும்கட்சியைச் சேர்ந்தவராகவே காட்டிக்கொண்டார் விஜய். 2011 தீபாவளிக்கு வெளியான விஜய்யின் `வேலாயுதம்' படத்தின் சாட்டிலைட் உரிமை ஜெயா டி.வி-க்கு வழங்கப்பட்டது.

`வேலாயுதம்' படத்தில், `இது எதிர்க்கட்சிக்காரர்களின் சதி' என்று ஒரு வசனம் வரும்; அந்த வசனத்துக்கு மறு வசனம் பேசும் விஜய் `நல்லவேளை நான் ஆளும்கட்சி' என்று சொல்லியிருப்பார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., சி.பி.எம்., சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும், 150 சீட்களை கைப்பற்றித் தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தது அ.தி.மு.க. தே.மு.தி.க 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. `அ.தி.மு.க-வின் பிரமாண்ட வெற்றியில் எங்களுக்கும் பங்குண்டு' என்று தே.மு.தி.க-வினர் மார்தட்டிக் கொண்டனர். ஆனால், தனிப்பெரும்பான்மையாகக் கிடைத்த வெற்றியைக் கூட்டணி கட்சிகளோடுகூட பங்கு போட்டுக்கொள்ள ஜெயலலிதா விரும்பவில்லை.

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் விஜயகாந்த்

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் விஜயகாந்த்

தி.மு.க வெறும் 23 இடங்களில் மட்டுமே வென்றிருந்த காரணத்தால் தே.மு.தி.க எதிர்க்கட்சியானது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். அதன் பின்னர், சட்டசபையிலேயே இரண்டு கட்சிகளும் மோதிக்கொண்டன. தே.மு.தி.க-வின் கொறடா சந்திரகுமார் (இப்போது தி.மு.க-வில் இருக்கிறார்), பேருந்துக் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றைப் பற்றிப் பேசியதுதான் இரண்டு கட்சிகளும் சட்டமன்றத்திலேயே மோதிக் கொண்டதற்கு முக்கியக் காரணம். ``தே.மு.தி.க-வோடு கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன்'' எனக் காட்டமாகப் பேசினார் ஜெயலலிதா.

29 தொகுதிகளில் வென்ற கூட்டணிக் கட்சியோடுகூட வெற்றியைப் பகிர்ந்துகொள்ளாமல் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று பேசிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விஜய்யின் தந்தையும் சீமானும் பேசியது நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

2011-ல், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவதை எதிர்த்து நாகப்பட்டினத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விஜய், ``தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் இவ்வளவு கொடுமைப்படுத்திய பிறகும் மத்திய, மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இலங்கை ராணுவத்துக்கு பயப்படறவங்க இல்ல நாங்க... உலக வரைபடத்துல இலங்கைங்கிற நாடே காணாமப் போயிடும்!'' எனக் கடுங்கோபத்தோடு முழங்கினார்.

 `கீதை' சர்ச்சை; மன்மோகன், மோடி சந்திப்பு; `அணில்' பின்கதை! - முதல்வராகும் முன்பு VIJAY அரசியல்!

இதுவரையிலும்கூட ஜெயலலிதா விஜய்யைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 2011 டிசம்பரில், தமிழகத்தில் `தானே' புயல் கோரதாண்டவம் ஆடியது. கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது தானே புயல். அந்தச் சமயத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் நிவாரண உதவித் தொகையை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேரில் சந்தித்து வழங்கினர். ஆனால், விஜய்யோ புதுச்சேரி, கடலூர் ஆகிய பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நிவாரணப் பொருள்களைப் பொதுமக்களுக்கு வழங்கினார் விஜய். அங்கு விஜய்யைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் சுப்பையா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடலூர் கம்மியாப்பேட்டை பகுதியில் பிரமாண்ட மேடையமைத்திருந்தனர் விஜய் ரசிகர்கள். அங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய்.

கடலூர் கம்மியாப் பேட்டையைச் சேர்ந்த மீனவர்களுக்கு புதிய மீன்பிடி படகுகளையும் நிவாரணப் பொருள்களையும் வழங்கினார் விஜய். இந்த நிகழ்வில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்தது. விஜய்யின் 50-வது படமான `சுறா' மிகப் பெரிய தோல்விப் படமாக இருந்தாலும், விஜய் மீனவராக நடித்த காரணத்தினால் மீனவ மக்களிடத்தில் விஜய்யின் செல்வாக்கு அதிகரித்திருந்ததை அந்தக் கூட்டம் நிரூபித்தது.

Vijay at cuddalore

Vijay at cuddalore Twitter/anythingforvijay

பொதுவாக எம்.ஜி.ஆர் செல்லும் கூட்டங்களில், வயதான தாய்மார்கள் எம்.ஜி.ஆரை முத்தமிடுவது போன்ற புகைப்படங்களை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அதேபோன்று கடலூர் கூட்டத்தில் விஜய்க்கு பாட்டி ஒருவர் முத்தமிடுவது போன்ற புகைப்படம் வைரலானது. விஜய் ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களைக் கொண்டு `தலைவா வா... தலைமையேற்க வா' என்பது போன்ற வாசகங்களைக் கொண்ட பேனர்களையும் போஸ்டர்களையும் தமிழகத்தின் சில இடங்களில் வைத்தது அ.தி.மு.க-வினரிடம் கோபத்தைத் தூண்டியது.

விஜய்யின் `வேலாயுதம்' படத்தின் இசை வெளியீட்டு விழா 2011-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்றது. அங்கும் எக்கச்சக்க கூட்டம் கூடியது. அதன்பின் 2012-ம் ஆண்டு வெளியான `நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அந்த கல்லூரி நிர்வாகம் கிளாஸ் வாரியாகப் பிரித்து டிக்கெட் விற்பனை செய்தது. காசு கொடுத்தும் விஜய்யைப் பார்க்க அங்கு ஏராளமானவர்கள் கூடினர்.

இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த விழாவுக்கு விஜய் சென்றாலும் அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூடுவது, குறிப்பாகப் பெண்கள் கூட்டம் கூடுவது ஜெயலலிதாவிற்குப் பிடிக்காத விஷயமாக அமைந்தது.

velayudham audio launch

velayudham audio launchtwitter/@Ragunanthen1992

விஜய்க்குப் பெண் ரசிகைகள் ஏராளம். குறிப்பாக பி,சி சென்டர்களில் திருப்பாச்சி, சிவகாசி ஆகிய சென்டிமென்ட் படங்களின் மூலம் எல்லா வயதைச் சேர்ந்த பெண்களையும் கவர்ந்து வைத்திருந்தார் விஜய்.

தமிழகத்தில், அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே பலம் வாய்ந்த கட்சிகள்தான். ஆனால், தாய்மார்கள் ஆதரவை அதிகம் பெற்ற கட்சியாக கடந்த காலங்களில் இருந்தது அ.தி.மு.க-தான். அதே தாய்மார்கள் கூட்டம் விஜய்யைக் காணக் கூடுவதை ஜெயலலிதா விரும்பவில்லை.

2012 தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி படத்தின் ரிலீஸுக்கு முன்பு, `இஸ்லாமியர்களைத் தவறாக இப்படம் சித்திரிக்கிறது' என்று இஸ்லாமிய அமைப்புகள் விஜய்க்கு எதிராகக் கிளம்பின. `இந்தப் பிரச்னையின் பின்னணியில் ஜெயலலிதாதான் இருக்கிறார்' என்ற பேச்சுகள் அப்போது அடிபட்டன.

இந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி-யும் இஸ்லாமிய அமைப்புகளிடம் `எந்த உள்நோக்கத்தோடும் இந்தப் படத்தில் காட்சிகள் அமைக்கப்படவில்லை. அந்தக் காட்சிகள் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என்ற பிறகு துப்பாக்கி படம் சொன்ன தேதியில் வெளியானது.

Thuppakki

Thuppakki

இதையடுத்து, 2013-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் விஜய்யின் பிறந்தநாள் விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டு மேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், அந்த விழாவுக்கு அ.தி.மு.க அரசு எதிராக நின்ற காரணத்தால், ஏ.எம்.ஜெயின் கல்லூரி அனுமதி மறுத்தது. பின்னர் மேடை கலைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருந்தது விஜய்யின் `தலைவா'. இந்தப் படத்தின் பெயரும் பெயருக்குக் கீழே டேக் லைனான `டைம் டூ லீட்' வாசகமும் வெள்ளைச் சட்டை அணிந்து விஜய் பேசிய அரசியலும் அ.தி.மு.க-வினரையும் ஜெயலலிதாவையும் சூடேற்றியது. ஆகஸ்ட் 9-ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், 9 திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனால் எந்த திரையரங்கும் தலைவா படத்தை வெளியிட முன்வரவில்லை.

Thalaivaa

Thalaivaa

ஆகஸ்ட் 8-ம் தேதியன்று, விஜய்யும் எஸ்.ஏ.சி-யும் ஜெயலலிதாவைச் சந்திக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகின. ஆகஸ்ட் 9-ம் தேதியன்று தமிழகத்தைத் தவிர உலகம் முழுவதும் தலைவா படம் வெளியானது. தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் பலரும் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களுக்குத் `தலைவா' படத்தைக் காணப் படையெடுத்தனர்.

அடுத்த நாளே படம் நல்ல பிரின்ட்டில் இணையத்தில் வெளியானது. இதன்பின் ஆகஸ்ட் 14-ம் தேதியன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகர் விஜய். அந்த வீடியோவில்,

தலைவா படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியாகவில்லை. தியேட்டர்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்ததால் தமிழ்நாட்டில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் இருக்கிறோம். இது விஷயமாகப் பேச மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறோம். மிக விரைவில் அவர்களைச் சந்திக்க வாய்ப்புக் கொடுக்கப்படும் என்று நம்புகிறோம். அம்மா தமிழகத்துக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறார்கள். தமிழகத்தை முதல் மாநிலமாகக் கொண்டு வர உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு இவ்வளவு நல்ல விஷயங்களைச் செய்யும் அவர்கள், இந்த தலைவா பிரச்னையிலும் தலையிட்டுக் கூடிய சீக்கிரம் படம் வெளியாக உதவி செய்வார்கள் என்று நம்புகிறோம்.

நடிகர் விஜய்

இந்த வீடியோவில் கையைக் கட்டிக் கொண்டு மிகவும் அமைதியாகப் பேசியிருந்தார் விஜய்.

தலைவா படப் பிரச்னையில் ஜெயலலிதா சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெரிந்துகொண்ட காரணத்தால் திரையுலகைச் சேர்ந்த எவரும் தலைவா படத்துக்கு ஆதரவு தர முன்வரவில்லை. ஆனால், தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் விஜய்க்கு ஆதரவாகப் பேசினர். அதில் முக்கியமானவர் மறைந்த திமுக எம்.எல்.ஏ அன்பழகன்.

படக்குழு ஒப்புக் கொண்டால் என் அன்பு பிக்சர்ஸ் மூலம் `தலைவா' படத்தைத் தமிழகத்தில் 300 திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளேன்.

அன்பழகன்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு டி.வி நிகழ்ச்சியில், ``தமிழ் சினிமா ஜெயலலிதா ஆட்சியில நல்லாயில்ல... நடிகர் விஜய்கிட்ட கேட்டுப் பாருங்க தலைவா படத்தப்போ எவ்வளவு கஷ்ட்டப்பட்டார்னு..." என்று விஜய்யைப் பற்றி பேசியிருந்தார்.

விஜய் கையைக் கட்டிக்கொண்டு பேசிய வீடியோ வெளியானதிலிருந்து 6-வது நாள் அதாவது ஆகஸ்ட் 20-ம் தேதியன்று தமிழகத்தில் தலைவா படம் வெளியானது. அதன்பின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் விஜய். அந்த அறிக்கையில்...

பல வேலைகளுக்கு நடுவிலும் இப்பிரச்னைக்குத் தீர்வு கண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னோடு பொறுமை காத்த ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தலைவா படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

விஜய்

2013-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் `இந்திய சினிமா 100' என்ற பெயரில் பிரமாண்ட விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவிற்கு இந்தியா முழுவதுமிருக்கும் உச்ச நட்சத்திரங்கள் வருகை தந்திருந்தனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவருக்கும் முன் வரிசையில் நாற்காலிகள் ஒதுக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் நாற்காலிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

விஜய்யின் பெயர் மட்டும் எந்தவொரு நாற்காலியிலும் ஒட்டப்படாததால், அவரைப் பிரபலங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதியின் கடைசி வரிசையிலுள்ள இருக்கையில் அமரச் செய்தார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். விஜய்யின் நல்ல நண்பரான விக்ரம் தனக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அங்கு அமராமல் விஜய்யின் அருகில் வந்து அமர்ந்தார்.

`இது வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டது' எனக் குற்றம்சாட்டும் விஜய் ரசிகர்கள், விஜய்யின் அருகில் வந்து அமர்ந்த விக்ரமை இன்று வரை கொண்டாடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்த, விழாவின் அடுத்த நாளில் விஜய்க்கும் முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.

vijay, vikram

vijay, vikram

இந்தச் சம்பவத்திற்குப் பின் விஜய் எந்தக் கட்சிக்கும் சார்பாகப் பேசவில்லை. மிகவும் அமைதியாகி இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பெரிய நட்சத்திரங்களில், முதல் ஆளாக வந்து மரியாதை செய்துவிட்டுப் போனவர் விஜய்தான்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களுக்காக தமிழ்நாடு வந்திருந்த பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளரான மோடி, ரஜினியையும், விஜய்யையும் சந்தித்துவிட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

பிகில் இசை வெளியீட்டு விழா

பிகில் இசை வெளியீட்டு விழா

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் அரசியல் பேச ஆரம்பித்த விஜய், படங்களிலும் சரி, இசை வெளியீட்டு விழாக்களிலும் சரி ஆளும்கட்சியான அ.தி.மு.க-வை சீண்டிப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

20% மக்கள் செய்த தவறுக்காக, 80 சதவிகித மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள்!

2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அரசு கொண்டு வந்தபோது, ரஜினி, கமல் தொடங்கிய இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் வெகுவாக வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த விஜய், ``மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நான் நிச்சயமாக வரவேற்கிறேன். அதே நேரம், இது சரியான திட்டமிடலுடன் செய்யப்பட்டிருக்க வேண்டும். 20 சதவிகித மக்கள் செய்த தவறுக்காக, நாட்டின் 80 சதவிகித மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில், நன்மைகளை விட, சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மேலோங்கி இருக்கின்றன'' என விமர்சனம் செய்தார்.

vijay Press meet

vijay Press meet

2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு கலந்துகொண்ட விஜய், `பீட்டா' அமைப்புக்கு எதிராக வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். `மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி-க்கு எதிராக விஜய் வசனம் பேச, ஹெச்.ராஜா, தமிழிசை என தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர்கள் வரிசைகட்டி வந்து விஜய்யை வறுத்தெடுத்தனர். `ஜோசப் விஜய்' என விஜய்யின் முழுப்பெயரை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அரசியல் செய்ய, `ஜோசப் விஜய்' என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்தார் விஜய்.

2018-ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100-வது நாளில், பேரணியாகச் சென்ற மக்களில் 13 பேரைச் சுட்டுப் படுகொலை செய்தது காவல்துறை. பாதிகப்பட்ட குடும்பங்களுக்கு நள்ளிரவில் சென்று ஆறுதல் சொல்லியதோடு, அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கிவிட்டு வந்தார் விஜய். நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார் விஜய்.

 Anitha House - Sterlite Issue

VIJAY: Anitha House - Sterlite Issue

`சர்கார்' படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான `கோமளவள்ளி' என்ற பெயரை வில்லி கதாபாத்திரத்துக்குப் இட்டதும், படம் முழுவதும் அரசியல் பேசியதும் அ.தி.மு.க-வினரைக் கோபம் கொள்ளச் செய்தது. விஜய்யின் பேனர்கள் பல இடங்களிலும் கிழித்தெறியப்பட்டன. பின்னர், கிடைக்கும் மேடைகளில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் அரசியல் பேசினார் விஜய்.

2024, பிப்ரவரி 2-ம் தேதி அன்று, `தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கினார். முதல் மாநாட்டில் தி.மு.க-வை அரசியல் எதிரியாகவும், பா.ஜ.க-வை கொள்கை எதிரியாகவும் அறிவித்தார். கரூருக்குச் விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் சிக்கி உயிரிழந்தது அவரது அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் கரும்புள்ளியாக அமைந்தது.

tvk vijay

tvk vijay

கட்சி தொடங்கிய பின்னர் வெளியான `ஜனநாயகன்' படமும் சென்சார் போர்டால் முடக்கப்பட்டது. இன்று வரை அந்தப் படம் வெளியாகாத நிலையில், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருக்கிறார் விஜய். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் விஜய்யின் பெயர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

விஜய்மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டு மக்கள் அவரை அரியணையில் ஏற்றியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் விஜய்க்கு இருக்கிறது!

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்!
Read Entire Article