TVK: 'குஜராத் நிலநடுக்கம், ஜல்லிக்கட்டு...'- அடித்தளம் முதல் அரியணை வரை; விஜய்யின் அரசியல் டைம்லைன்!

10 hours ago 10

தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்று சாதித்திருக்கிறது. ஆனாலும், பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கலும் ஏற்பட்டது.

இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு, பெரும்பான்மையை நிரூபித்து, முதல்வர் அரியணையை நெருங்கியிருக்கிறார் விஜய். இன்று பதவியேற்பு விழாவும் நடைபெறுகிறது.

விஜய், தன்னுடைய அரசியல் வருகை பற்றி நீண்ட வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டுவிட்டார் என்பதுதான் நிதர்சனம்.

சூசகமாக அது பற்றி விஜய்யும் பல மேடைகளிலும், நேர்காணல்களிலும் பேசியிருக்கிறார். விஜய் ஒரு முன்னணி நடிகராக உருவெடுத்தப் பிறகு, அவரின் அரசியல் வருகை பற்றிய கேள்விகளும் அவரைத் தொடர்ந்தன.

விஜய்

விஜய்

கடந்த 2011-ஆம் ஆண்டு விஜய், ஓர் ஊடகத்திற்கு அளித்திருந்த பேட்டியில், அவருடைய அரசியல் வருகை பற்றி, "நான் நடிகனாக வேண்டுமென விரும்பினேன். ஆனால், இவ்வளவு பெரிய நடிகனாக நான் வருவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. காலம் என்னை இங்கு உட்கார வைத்திருக்கிறது.

அதே காலம், ஒரு நாள் என்னை ஓர் இடத்தில் உட்கார வைக்கும். அதற்கான காலம், சூழல், இடம் என அனைத்தும் அமைய வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், அதற்கான நேரம் இது கிடையாது.

அந்தச் சமயத்தில் நான் கண்டிப்பாக வருவேன். அதற்கான அடித்தளத்தை நான் வலுவாக்க வேண்டும். அதற்கான வேலைகளை நான் செய்து கொண்டே இருப்பேன்" எனக் கூறியிருந்தார்.

அப்படியான அடித்தளத்தை தன்னுடைய மக்கள் இயக்கம் மூலமாக அமைத்து, சரியான காலத்திற்குக் காத்திருந்து அரசியலுக்குள் வந்தார் விஜய். அவரின் வருகை, தமிழக அரசியலில் பெரும் அலையாக உருவெடுத்து அவருக்கு வெற்றி வாய்ப்பையும் இப்போது பெற்றுத் தந்திருக்கிறது.

இந்தப் பேட்டியில் விஜய் குறிப்பிட்டதைப் போல, தொடர்ந்து தன்னுடைய மக்கள் இயக்கங்கள் மூலமாக மெல்ல மெல்ல அடித்தளத்தைப் போட்டார் விஜய். அப்போதிருந்து தொடர்ந்து, பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்குக் குரல் எழுப்பவும் செய்திருக்கிறார். அப்படி அவர் மக்களுக்காகக் குரல் கொடுத்த சம்பவங்கள் தொடங்கி, அவருடைய அரசியல் பாதைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடித்தளம் இட்ட கதையை இங்கே பார்ப்போம்.

ஒரு நடிகர், முன்னணி நடிகராக உருவெடுக்கத் தொடங்கியவுடன் அவருக்கென ரசிகர்கள் இணைந்து நற்பணி மன்றத்தை உருவாக்கும் கதைகள் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான்.

அப்படி விஜய் ரசிகர்கள் உருவாக்கிய நற்பணி மன்றத்தை 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பாக மாற்றினார் விஜய். பட வெளியீட்டுச் சமயக் கொண்டாட்டங்கள், படத்திற்கான விளம்பரங்கள் என்ற நோக்கத்தைத் தாண்டி, பல்வேறு சமூக பணிகளிலும் தன்னுடைய மக்கள் இயக்கங்களை ஈடுபடுத்தினார்.

இதன் மூலம், ரத்த தானம், இலவச கண் சிகிச்சை, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதற்கான பரிசு எனத் தொடர்ந்து பல நற்பணிகளை முன்னெடுத்தார் விஜய். இதனைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகப் போராட்டக் களத்திலும் அவர் இறங்கினார்.

விஜய் - விஜய் மக்கள் இயக்கம்

விஜய் - விஜய் மக்கள் இயக்கம்

2001 - குஜராத் நிலநடுக்க நிவாரணம்:

2001-இல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல குடும்பங்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தன. அவர்களின் நிலைமை நிலைகுலைந்துப் போனது. தமிழ்த் திரைத்துறையினர் பலரும் குஜராத் மக்களுக்காக நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

அவர்களோடு விஜய்யும் நிவாரண உதவிகளைச் செய்தார். இத்தோடு மட்டுமல்லாமல், நிவாரண நிதிக்காக ரசிகர்கள் உதவிட வேண்டுகோள் விடுத்தார். மேலும், நேரடியாக வீதிகளில் சென்று நிதி திரட்டும் பணியிலும் அவர் ஈடுபட்டார்.

2008 - ஈழத் தமிழர் பிரச்னைகளுக்காக சென்னையில் போராட்டம்:

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து, சென்னையில் தமிழ்த் திரையுலகமே ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தது. இதில் விஜய்யும் பங்கேற்றார்.

பிறகு, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்த சில நாட்களிலேயே, தனது மக்கள் இயக்கத்தின் மூலமாகச் சென்னையில் விஜய் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். 8 மணி நேரம் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தனது தாய், தந்தை, மனைவி மற்றும் ரசிகர்களோடு சேர்ந்து அவர் நடத்தியிருந்தார்.

இது தொடர்பாக அப்போது தன்னுடைய ரசிகர்களுக்கு அறிக்கை வாயிலாக அறிவுறுத்திய விஜய், "துயரத்தின் அடையாளமாக கறுப்புத் துணியுடன் மௌனமாகவும், அமைதியாகவும், அறவழியிலும், அஹிம்சா வழியிலும் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்" என்பதைக் குறிப்பிட்டு அறவழியில் போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.

விஜய் - உண்ணாவிரதப் போராட்டம்

விஜய் - உண்ணாவிரதப் போராட்டம்

2011 - நாகப்பட்டினம் போராட்டம்:

எல்லை மீறி மீன்பிடிப்பதாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வந்தது. இதற்குக் கண்டனம் தெரிவிப்பதற்கு 2011-இல் நாகப்பட்டினத்தில் போராட்டம் நடத்தினார் விஜய்.

நற்பணி மன்றத்தை, மக்கள் இயக்கமாக மாற்றிய பிறகு விஜய் நடத்திய முதல் போராட்டம் இதுதான். "தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படும் சம்பவங்களுக்குக் குரல் கொடுக்காமல், மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

இது உணர்ச்சிகரமான விஷயம். அதனால், இந்தப் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்" என விஜய் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, இப்பிரச்னை குறித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தந்தி அனுப்புங்கள் எனவும் தனது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார் விஜய்.

இந்தப் போராட்டத்திற்குப் பிறகு விஜய்யின் அரசியல் என்ட்ரி பற்றிய பேச்சுகளும் அதிகமாகின. இதன் பிறகு, மக்கள் இயக்கமாக இணைந்து எந்தவொரு போராட்டத்தை விஜய் முன்னெடுக்கவில்லை. ஆனால், 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து நடத்திய போராட்டத்தில் விஜய் கலந்துக் கொண்டார்.

2017 - ஜல்லிக்கட்டு போராட்டம்:

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி, 2017-ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் பெரும் போராட்டம் வெடித்திருந்தது. அப்போது பீட்டா (PETA) அமைப்பிற்கு எதிராகப் பேசி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார் விஜய். இதன் பிறகு, இரவு நேரத்தில் தனது முகத்தை மூடிக்கொண்டு போராட்டத்தில் பங்கெடுத்தார்.

விஜய் - ஜல்லிக்கட்டு போராட்டம்

விஜய் - ஜல்லிக்கட்டு போராட்டம்

2017 - அனிதா மரணம்:

நீட் தேர்வினால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அப்போது, அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அரியலூர் சென்ற விஜய், அங்கு அனிதாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.

2018 - ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம்:

2018-ல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய். இரவு நேரத்தில், தனது ரசிகருடன் பைக்கில் சென்று, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பேசினார்.

விஜய் - ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம்

விஜய் - ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம்

இப்படி விஜய், தனது அரசியல் வருகைக்கான அடித்தளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பி வந்தார். களப் போராட்டங்களைத் தாண்டி, தன்னுடைய அரசியல் இமேஜை உருவாக்குவதற்கான கதைகளையும் சினிமாவில் தேர்வு செய்து நடித்தார்.

அதற்கான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் அப்போதே சந்தித்த விஜய், 2024-இல் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி, அவருடைய நேரடி அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், தமிழக அரசியலில் மாபெரும் அலையை உருவாக்கி வெற்றியையும் கண்டிருக்கிறார். மக்களும் வாக்களித்து தவெக-வைத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கச் செய்திருக்கிறார்கள். தன் முன்னுள்ள பொறுப்புகளையும், சவால்களையும் முதல்வர் விஜய் எப்படி கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Read Entire Article