Last Updated:May 10, 2026 7:27 PM IST
வந்தே மாதரம் பாடல் முதலில், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக ஒலித்ததை விசிக தலைவர் தொல் திருமாவளவன் கண்டித்து, முதலமைச்சர் விஜய் விளக்கம் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

“வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் உரிய விளக்கத்தை முதலமைச்சர் விஜய் கூற வேண்டும்” என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை பிடித்து தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல், ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று (10ஆம் தேதி) நடைபெற்ற விழாவில், ஆளுநர் அர்லேகர் தமிழக முதல்வராக விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விஜயை தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் முதலில் வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு ஆளுநர் அர்லேகர், எம்.எல்.ஏ. கருப்பையாவை தற்காலிக சபாநாயகராக பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மீண்டும் வந்தேமாதரம் பாடல் முதலில் ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் ஒலிக்கப்பட்டது.
செய்தியாளர்கள் சந்திப்பில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது; “தமிழ்நாட்டு அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதே வழக்கம். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் பாடுவதே நீண்ட கால நடைமுறை. ஆனால், முதலமைச்சர், இடைக்கால சபாநாயகர் பதவியேற்பில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற அரசியலை விரும்புவோர் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குரிய விளக்கத்தை முதலமைச்சர் விஜய் கூற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் அதிகாரிகளின் கவனக்குறைவா ஆளுநரின் விருப்பமா என தெரியவில்லை. இனிவரும் காலங்களில் வந்தே மாதரம் பாடல்தான் முதலில் ஒலிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அல்லது தவெக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ. 10 லட்சம் கோடி என்பது நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Vande Mataram | “வந்தே மாதரம் விவகாரம்… முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்
.png)







English (US) ·