Last Updated:October 13, 2025 3:08 PM IST
ஆந்திர சித்தூர் வீர்ப்பள்ளி மலை காட்டில் ஜண்டா பூஜை செய்து புதையல் வேட்டையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் மலைமீது அடர்ந்த காட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் ஜண்டா பூஜை செய்து புதையல் வேட்டை நடத்திய 6 பேரை போலீசார் பிடித்துள்ளனர். 4 மந்திரவாதிகள் தப்பியோடிய நிலையில் நரபலி கொடுக்கப்பட்டதா? என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. புதையல் வேட்டை முழு பின்னணி என்ன?
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்த பஞ்சானி அருகே இருக்கும் வீர்ப்பள்ளி மலை மீது அடர்ந்த காடுகள் உள்ளன. காட்டுக்குள் நள்ளிரவு ஆகி விட்டால் வித்தியாசமான ஒலிகள் ஒலிப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். சிலர் துணிந்து சென்று பார்த்தபோது பூசாரி கும்பல் ஒன்று அகோரமாக பூஜைகள் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உடனே வனத்துறை மற்றும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி வனத்துறையினர் உதவியுடன் தனிப்படை அமைத்து காட்டுக்குள் சென்ற போலீசார் மனிதர்களின் காலடி கூட படாத அடர்ந்த காட்டுக்குள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஜண்டா பூஜை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்த போலீசார் கூண்டோடு பிடிக்க முயன்றனர். அனால் பூஜையில் ஈடுபட்டிருந்த பூசாரிகள் 4 பேரும் நாலுகால் பாய்ச்சலில் தாவிக்குதித்து தப்பியோடி விட்டனர். அப்போது போலீசார் பூஜைக்கு வந்திருந்த ஆறு பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. கைதான இவர்கள் புதையல் வேட்டை கும்பல் என்பது தெரியவந்துள்ளது. தப்பியோடிய பூசாரிகள் காட்டக்குள் ஜண்டா பூஜை செய்தால் புதையல் கிடைக்கம் எனக் கூறி நம்ப வைத்துள்ளனர். அதன்படி பூஜை செய்து காட்டுக்குள் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்களை இந்த கும்பல் தோண்டி வைத்துள்ளது. ஒரு சில இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தது.
இந்த கும்பலுக்கு புதையலாக ஏதாவது கிடைத்ததா? புதையல் எடுப்பதற்கு முன் நரபலி ஏதும் கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஆந்திர எதிர்க்கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் எர்ரபள்ளி சீனிவாஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. புதையல் ஆசையைத் தூண்டி விட்டு மோசடி வேலையில் ஈடுபட்ட பூசாரிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :
October 13, 2025 3:08 PM IST
அடர்ந்த காட்டுக்குள் நள்ளிரவு 'ஜண்டா' பூஜை.. புதையலுக்காக நரபலியா..? விசாரணையில் திடுக் தகவல்!