அண்ணாதான் ஆள்கிறார்!

19 hours ago 17

முன்பொரு நாள் ஒருவர் வந்தார்…

முன்பெனில்

நான் பிறப்பதற்கு

சில பத்தாண்டுகளுக்கு

முன்பு.

என்னையொத்த

உயரம் தான்

ஆஜானுபாகுவான

தோள்கள் இல்லை

சிவிரென்ற

தோல் இல்லை

கொஞ்சம் மா நிறம் தான்.

பார்த்தால்

பெரிய அறிவாளி போல்

தெரியவும் இல்லை.

காஞ்சியில் பிறந்தார்

பச்சையப்பன் கல்லூரியில்

படித்தார்;

குமாஸ்தா வேலைதான்

பெற்றோரின்

மேலதிக எதிர்பார்ப்பு.

அவருக்குத் தெரியும்

தான் யாரென்று!

ஈரோடு சென்றார்

கைத்தடியால்

தன்னை பட்டை
தீட்டிக் கொண்டார்.

பேசினார், பேசினார்

யாழிசையை விட

ஈர்ப்பு அப் பேச்சு.

வில்லிலிருந்து புறப்பட்ட

அம்பின் விசை

திசை காட்டியாக அல்ல

அவரே திசை என்றானது.

இளைஞர்கள்  பெரும் படையாயினர்;

அவர்களின் ஆயுதம்

கொடு வாளல்ல;

அரசியல்.

அறிவுலகம் அவரை

அதிசயித்துப் பார்த்தது;

அவரின் சிந்தனை கண்டு

மிரண்டு நின்றது.

தமிழ் நாட்டின்

தலைமகன் ஆனார்

தமிழ் நாடு

தலை நிமிரத் துவங்கியது.

அவர் தத்துவங்களால்

தன்னை நிரப்பியிருந்தார்

தமிழ் நாடு

தன்மானத்தால்

நிறைந்தது.

இன்றைக்கும் பலர்

அவர் தத்துவங்களைக்

கண்டு அஞ்சுகின்றனர்.

அவர் தான் அண்ணா!

சில காலத்திற்கு முன்

ஒருவர் வந்தார்;

பாட்டி சொன்ன கதைகள்

தோற்றுப் போயின;

இப்போது ஒருவர் வந்திருக்கிறார்

பதுங்குகுழியே

அவரது வாழ்விடம்.

வலைக்குள்ளிருந்து

எட்டிப்பார்க்கும் எலியைப் போல

அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்.

அண்ணா மேரு மலையென

உயர்ந்து நிற்கிறார்.

அவரைச் சிதைக்க

யார், யாரோ வருகிறார்கள்.

அவர்கள் கையிலிருக்கும் உளி

அண்ணா மீது பட்டுத்

தெறிக்கிறது.

அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது

ஏனென்றால்  அவர்

எம் அண்ணா;

தமிழ் நாட்டை இப்போதும்

அவர்தான் ஆள்கிறார்;

எப்போதும் ஆள்வார்.

அவர்தான் அண்ணா!

– வ.ரா.தமிழ்நேசன், மும்பை

Read Entire Article