Last Updated:May 10, 2026 1:42 PM IST
தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். யார் இவர் என்பது குறித்து பார்ப்போம்.

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை (மே 11) தமிழக சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. யார் இந்த கருப்பையா? என்பது குறித்து பார்ப்போம்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை பிடித்து தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல், ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் அர்லேகர் தமிழக முதல்வராக விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விஜயை தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். விஜய் முதல்வராக பதவி ஏற்றதும், வீடுகளுக்கு இலவச 200 யூனிட் மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் களைப்பு படை உருவாக்கம் ஆகிய 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் விஜய். இதையடுத்து அவர் தலைமை செயலகம் சென்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் தற்காலிக சபாநாயகராக தவெக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூரைச் சேர்ந்தவர் கருப்பையா. 1980-ம் ஆண்டிலிருந்து அதிமுக உறுப்பினராக இருக்கிறார். மீனவரணி ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக சார்பில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அதன் பிறகு 2016, 2021 ஆகிய 2 முறையும் அவருக்கு அதிமுகவில் சீட் கொடுக்கப்படவில்லை. ஆகவே 2026 தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதனால் கடந்த மார்ச் மாதம் செங்கோட்டையனை சந்தித்து தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு சோழவந்தான் (தனி) தொகுதியில் போட்டியிட விஜய் வாய்ப்புக்கொடுத்தார். அதன்படி சோழவந்தான் எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றவருக்கு தற்போது தற்காலிக சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)






English (US) ·