
கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ப்ளாக் பாண்டி. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் இவருக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. அதேபோல 2010-ம் ஆண்டு வெளியான ‘அங்காடித் தெரு’ படம் ப்ளாக் பாண்டிக்கு புதிய அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து, ‘தெய்வ திருமகள்’, ‘வேலாயுதம்’, ‘நீர்ப்பறவை’, ‘சாட்டை’, ‘ஜில்லா’, ‘பூஜை’ என பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். அகரம் அறக்கட்டளை தொடங்கும் முன்பே நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமார் தனது தங்கைக்கு கல்வி கட்டணம் செலுத்தி உதவியதாகவும், தன் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் குறித்தும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ப்ளாக் பாண்டி பகிர்ந்துள்ளார்.
ப்ளாக் பாண்டி கூறுகையில், “1995-ல் மதுரையிலிருந்து குடும்பத்துடன் நான், அம்மா, அப்பா, தங்கச்சி சென்னைக்கு வந்தோம். எங்க அப்பா கீபோர்டு ப்ளேயர். வாழ்க்கை மாறிவிடாதா என்ற எண்ணத்துடன் சென்னை வந்தோம். அந்த சமயத்தில் காலையில் பள்ளிக்குச் சென்று படிப்பேன். மாலையில் ஒவ்வொரு பகுதிக்கு சென்று முறுக்கு, பிஸ்கட்டுகளை விற்பேன். அதன் பிறகு அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 600 ரூபாய் ஃபீஸ் கட்டமுடியாமல் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டேன்.
அப்போது நான் அண்ணாமலை சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போது, சூர்யாவின் அப்பா சிவகுமார் என் தங்கைக்கு கல்வி கட்டணம் செலுத்தினார். அப்போது அவர்கள் அகரம் அறக்கட்டளை கூட தொடங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் கல்விக்கட்டணம் செலுத்தினார். நான் 1999-லிருந்தே நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.
8-ம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். 10-ம் வகுப்பு தொலைதூர கல்வி முறையில் படித்தேன். பெரிய கம்பெனிகளில் ஆஃபீஸ் பாய் போன்ற வேலைகளை பார்த்திருக்கிறேன். என் அம்மா பல நாள் பசியுடன் இருந்து எங்களை வளர்த்தார். இதை கஷ்டங்கள் என்று சொல்லமாட்டேன். எல்லாமே படிப்பினை தான். அப்பா சென்ற பிறகு, முழு பொறுப்பும் எங்கள் மீது விழுந்தது.
நான் முறுக்கு, பிஸ்கட் விற்க செல்லும் இடங்களில் சிலர் டீ, சாப்பாடு கொடுப்பார்கள். சில வீடுகளில் நாய் துரத்தும். சில வீடுகளில் செருப்பு திருடிவிட்டேன் என பிடித்து வைப்பார்கள். எல்லாம் எனக்கு கிடைத்த அனுபவங்கள்” என்றார். மேலும் ‘உதவும் மனிதம்’ என்ற அமைப்பின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார் ப்ளாக் பாண்டி.