அமெரிக்க அரசாங்க இணையத்தளத்தில் இருந்து முக்கியப் படங்கள் மாயம்

2 hours ago 12

b3ecb99b-1e8f-4a1d-b4f3-b228da65f2c8

எப்ஸ்டீனின் நியூயார்க் இல்லத்தில் இருந்த ஒரு மேசையின் கதவு திறந்தநிலையில், அதனுள் இருந்த புகைப்படம் ஒன்றில் திரு டிரம்ப் இருப்பதாக ஊடகங்கள் குறிப்பிட்டன. - படம்: நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க்: அமெரிக்க நீதித் துறை அண்மையில் வெளியிட்ட ஆவணங்களில் இருந்து பல படங்கள் நீக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆவணங்கள், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் விசாரணை தொடர்பானவை.

எந்தவொரு விளக்கமும் தெரிவிக்கப்படாமல் அந்தப் படங்கள் நீதித்துறையின் இணையத்தளத்தில் இருந்து சனிக்கிழமை (டிசம்பர் 20) அப்புறப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்க நீதித்துறை தனது ஆவணங்களைச் சேமிக்க உருவாக்கிய இணையத்தளம் அது.

மொத்தம் 16 புகைப்படங்கள் அந்த ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அதிபர் டிரம்ப்பின் புகைப்படம்.

எப்ஸ்டீனின் நியூயார்க் இல்லத்தில் இருந்த ஒரு மேசையின் கதவு திறந்தநிலையில், அதனுள் இருந்த புகைப்படங்கள் தெரிவதைக் காட்டும் படம் அது. அந்தப் புகைப்படங்களில் ஒன்றில் திரு டிரம்ப் இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

புகைப்படங்கள் திடீரென்று இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த எந்த ஒரு விளக்கத்தையும் நீதித்துறை வெளியிடவில்லை. அந்தத் துறையின் பேச்சாளர் ஒருவரிடம் அதுகுறித்து கேட்கப்பட்டதற்கு அவரிடம் இருந்தும் பதில் இல்லை என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க சிறுமியரைக் கடத்திய குற்றத்திற்காக எப்ஸ்டீன் விசாரிக்கப்பட்டு வந்தார். விசாரணைக் காவலில் சிறை வைக்கப்பட்டு இருந்த அவர், கடந்த 2019ஆம் ஆண்டு திடீரென உயிரிழந்தார்.

சிறுமியர் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை அடங்கிய 13,000க்கும் மேற்பட்ட கோப்புகளைக் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) நீதித்துறை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நீக்கப்பட்ட திரு டிரம்ப்பின் படத்தை இணையத்தில் தேடி, கண்டுபிடித்து அதனை அவர்கள் மீண்டும் சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளனர்.

அத்துடன், ‘இந்தப் படம் நீக்கப்பட்டது உண்மையா’ என்று தலைமைச் சட்ட அதிகாரியிடம் கேட்கும் கேள்வி ஒன்றை அதில் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

“இன்னும் என்னவெல்லாம் மறைக்கப் போகிறீர்கள்? அமெரிக்க மக்களிடம் ஒளிவுமறைவின்றி நடந்துகொள்ள வேண்டியது அவசியம்,” என்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தங்களது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

நீதித்துறை வெளியிட்டுள்ள ஆவணங்களில் இடம்பெற்றுள்ள படங்களில் பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவர் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்.

அவ்வாறு வெளியிடப்பட்ட படம் ஒன்று, அவர் ஒரு தனியார் விமானத்தில் சிரித்த, சற்று சிவந்த முகத்துடன் இருப்பதையும் அவரது நாற்காலியின் கையில், பொன்னிற முடியுடன் உள்ள இளம்பெண் ஒருவர் அமர்ந்திருப்பதையும் காட்டுகிறது.

அதிபர் டிரம்ப்பின் நீதித்துறை வெளியிட்டுள்ள அந்தப் படங்கள் எப்போது, எங்கே, ஏன் எடுக்கப்பட்டன என்ற விவரங்கள் இடம்பெறவில்லை.

Read Entire Article