அரபு மொழி தெரிந்தவர்கள் குறட்பாக்களைப் படித்தவுடன் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக இயற்றப்பட்ட இந்த மொழிபெயர்ப்புத் தொகுப்பு, மத்திய கிழக்கு நாடுகளின் புத்தகக் கடைகளிலும் கண்காட்சிகளிலும் இடம்பெற்று வாசகர்களைக் கவர்ந்து வருகிறது.
திருக்குறளை முதன்முதலில் தமிழிலிருந்து நேரடியாக அரபு மொழியில் மொழியாக்கம் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் டாக்டர் ஜாகிர் ஹுசைன்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபு, பாரசீகம், உருதுத் துறையின் இணைப் பேராசிரியராகவும் தலைவராகவும் செயல்படும் அவர், ஆத்திசூடி, பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் எனத் தீந்தமிழ்ப் படைப்புகள் பலவற்றையும் புதியதோர் ஓசையில் வடித்துள்ளார்.
மூன்று கட்டங்களில் இந்த மொழிபெயர்ப்பைச் செய்ததாகக் குறிப்பிட்ட 54 வயது டாக்டர் ஜாகிர் ஹுசைன், 2011ல் இதற்கான பணியைத் தொடங்கி 2013ல் அதனை நிறைவேற்றியதாகக் கூறினார்.
2019ல் குவைத் அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் திருக்குறள் படைப்பு. - படம்: ஜாகிர் உசேன்
அப்போதைய தமிழக அரசு, திருக்குறளை மொழிபெயர்க்கும்படி தம்மை நியமித்ததால் இதனை மேற்கொண்டதாகக் கூறிய டாக்டர் ஜாகிர், நாளடைவில் அதன்மீதான ஆர்வம் அதிகரித்ததாகக் குறிப்பிட்டார்.
“சாதாரணமாகத் தொடங்கிய அந்தப் பணி, போகப் போக உணர்வுபூர்வமான அனுபவமாக மாறியது. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் திருக்குறள் மொழிபெயர்ப்பை அரபு மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் ஆர்வம் என்னுள் கடந்த 15 ஆண்டுகளாக ஒளிர்ந்து வந்தது,” என்று அவர் கூறினார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையில் அதற்கான பணிகளை முடித்துவிட்டதாக அவர் சொன்னார். அப்போது, தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.
2020ல் வெளிவந்த மறுபதிப்பு, சற்று மாறுதலான அம்சங்களைக் கொண்டிருப்பதாக டாக்டர் ஜாகிர் கூறினார். “புதிய பதிப்பில் முன்னுரையும் அணிந்துரையும் சேர்க்கப்பட்டுள்ளன. வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் திருப்புவது போன்ற அமைப்பிலுள்ள அந்த நூலின் வலப்பக்கங்கள் அரபு மொழியிலும் இடப்பக்கங்கள் தமிழிலும் இருக்கும்,” என்று அவர் விளக்கினார்.
2015ல் சவூதி அரேபியாவில் திருக்குறள் படைப்பு. - படம்: ஜாகிர் உசேன்
இதன்பிறகு வெளிவந்துள்ள மூன்றாவது பதிப்பு, அனைத்துலக வாசகர்களுக்கான அரபு மொழி மட்டும் இடம்பெற்றுள்ள நூலாக உள்ளது. கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட அந்த நூலின் மொழிநடை மேலும் மெருகேற்றப்பட்டதாக டாக்டர் ஜாகிர் குறிப்பிட்டார். அரபு வாசகர்களுக்கு சிக்கல்கள் ஏதுமின்றி நூலை எளிதாகக் கொண்டுசேர்ப்பது இதன் நோக்கமாகும்.
2015ல் சவூதி அரேபியாவில் நடைபெற்ற அனைத்துலக அரபுக் கவிஞர்கள் மாநாட்டில் திருக்குறளை டாக்டர் ஜாகிர் அறிமுகம் செய்தார். இதன்மூலம் சவூதி அரேபியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய இலக்கியமாகத் திருக்குறள் அமைந்தது.
2025 நவம்பரில் ஷார்ஜா அனைத்துலகப் புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியிடப்பட்டது. அந்நூலை வாங்க கண்காட்சியின் மையப்பகுதிக்குப் பலரும் திரண்டு வந்திருந்ததை டாக்டர் ஜாகிர் நினைவுகூர்ந்தார்.
“தமிழ் நூலின் மொழிபெயர்ப்பைத் தமிழர் ஒருவர் அரபு வாசகர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சியில் கொண்டு சேர்ப்பது அரிது. இதுவே முதல்முறையாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
ஆய்வுக்கு வாழ்நாள் அர்ப்பணம்
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையைச் சேர்ந்த அகமது - சுலைஹா பீவி இணையர்க்கு 1971 மே 25ல் மகனாகப் பிறந்தார் டாக்டர் ஜாகிர். இவரது தந்தை தமிழக அரசின் ஆரம்பச் சுகாதாரத் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். தக்கலையில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி கற்ற டாக்டர் ஜாகிர், பின்னர் இஸ்லாமிய சமயக் கல்வியில் நாட்டம் செலுத்தினார்.
இளவயது முதல் இஸ்லாமிய சமய வகுப்புகளையும் அரபு மொழியையும் கற்ற டாக்டர் ஜாகிர், பின்னர் இஸ்லாமிய இறையியல் சம்பந்தப்பட்ட பட்டக்கல்வியை முறையாகக் கற்றார். இந்த அடிப்படையைக் கொண்டு அரபு செவ்விலக்கியம், இலக்கணம், சமய நூல்கள் போன்றவற்றையும் அவர் கற்றார்.
2019ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ், அரபு மொழிகளில் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. - படம்: ஜாகிர் உசேன்
சமயக் கல்வி கற்றபோதே பொதுக் கல்வியிலும் கவனம் செலுத்திய அவர், சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி வழியாக வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து 1998ல் அரபுத் துறையில் முதுகலைப் பட்டமும், 2005ல் அரபு இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்று அவர் தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொண்டார்.
2005 முதல் 2007 வரை சென்னைப் புதுக்கல்லூரியில் அரபுத் துறைக்கான இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் ஜாகிர், பின்னர் திருநெல்வேலி பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியிலும் அதே துறையில் பணிபுரிந்தார். அதன்பின் 2008ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுப் பேராசிரியராக அவர் நியமிக்கப்பட்டார்.
தமிழிலிருந்து அரபு மொழிக்கும் மட்டுமன்றி அரபியிலிருந்து தமிழுக்கும் டாக்டர் ஜாகிர் நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். “1996ல் முதுநிலைப் பட்டம் பயின்றபோதே இத்தகைய மொழிபெயர்ப்புகளைச் செய்துகொண்டிருந்தேன். மொழிகளை நன்கு ஆய்வு செய்யும் சூழல் எனக்கு உருவானது,” என்று அவர் குறிப்பிட்டார்.
டாக்டர் ஜாகிரின் மொழிபெயர்ப்பு, தமிழிலிருந்து அரபுக்கு நேரடியாகச் செய்யப்பட்ட முதல் மொழிபெயர்ப்பு என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 1983ல் பேராசிரியர் யூசுஃப் கோக்கன் ஆங்கிலத்திலிருந்து திருக்குறளை அரபுக்கு மொழிபெயர்த்துள்ளார். இன்னும் சிலர் மற்ற மொழிகளிலிருந்து அரபுக்கு மொழிபெயர்த்திருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
சமய நெறிக்கு முரணன்று
குறளில் அரபு வடிவம் இரண்டு வரிகளில் இருந்தாலும் அவை புதுக்கவிதை நடையில் இருக்கும் என்று அவர் கூறினார். “தமது மொழியாக்கத்திற்குப் பொழிப்புரை தேவையில்லை; அரபு மொழி தெரிந்தவர்கள் எளிதாகப் படிக்கலாம்,” என்றார் அவர்.
பழம்பெரும் தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனின் திருக்குறள் உரையின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான முறையில் இயற்றப்பட்டதை டாக்டர் ஜாகிர் குறிப்பிட்டார்.
திருக்குறளின் பல கருத்துகளுக்கும் இஸ்லாமிய சமயத்திற்கும் ஒற்றுமை இருப்பதாகக் கூறிய டாக்டர் ஜாகிர், இஸ்லாமிய மெய்யியலுக்கு மாறுபட்ட சில குறள்களாலும் எந்த நெருடலும் வாசகர்களுக்கு இருக்காது என்று கூறினார்.
இயன்றவரை சமய அடையாளங்கள் இந்தப் படைப்பில் வராதபடி மொழிபெயர்த்தது சவாலாக இருந்ததாகவும் அவர் சுட்டினார். ஆயினும், திருக்குறளின் மூலத்திலுள்ள சமயக் குறிப்புகள் திரிக்கப்படாமல் உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“துபாய், சவூதியில் பலர் திருக்குறளை வரவேற்கின்றனர். திருக்குறளின் பின்புலத்தைப் புரிந்துகொண்டு அவற்றிலுள்ள கருத்துகளை மகிழ்வுடன் ஏற்கின்றனர்,” என்றார் டாக்டர் ஜாகிர்.
அரேபிய மெய்யியல் கவிதைகள், பழமொழிகள் ஆகிவற்றையும் பிளேட்டோ போன்ற கிரேக்க அறிஞர்களின் படைப்புகளையும் திருக்குறள் நினைவுபடுத்துவதாக குவைத் கவிஞர் சாலிம் அல்ருமைதி பாராட்டினார்.
திருக்குறளின் தொடர்பில் பல விருதுகளைப் பெற்றுள்ள டாக்டர் ஜாகிர், பல மொழிகளின் நுட்பக்கூறுகளை ஆராய்ந்து அழகான வாக்கியங்களை வடிப்பதில் இன்பம் காண்பவர்.
நவீன தமிழ் இலக்கியங்களை அரபு மொழிக்கு இவ்வாறு மொழியாக்கம் செய்வதற்கான திட்டங்கள் நடப்பில் இருப்பதாக டாக்டர் ஜாகிர் கூறினார். உலகம் போற்றும் தமிழ் இலக்கியங்கள் உருவாகிவரும் நேரத்தில் அவற்றை மேலும் பலரிடம் கொண்டுசேர்க்க அவர் முனைந்து வருகிறார்.
.png)






English (US) ·