கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றும் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைகள் நிறுத்தப்பட்டு, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நீதிபதிகளின் உத்தரவின் முழு விவரம் வெளியாகியுள்ளது.
அந்த உத்தரவில், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து, தமிழக அரசு அல்லது உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருந்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவின் பணிகள் முடிவுக்கு வருகின்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவின் விவரம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, இதற்கு முன் சிறப்பு புலன் விசாரணைக்குழு அல்லது விசாரணை ஆணையம் நியமனம் செய்யப்பட்டிருந்தால், அது உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் வில்சன் கருத்து
முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியானபோது, செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பின் மூத்த வழக்கறிஞர் வில்சன், அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை தொடரும் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணையை நிறுத்தி வைப்பதாகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம், கரூர் வழக்கில் முழுமையான அதிகாரத்துடன் சிபிஐ மட்டுமே இனி விசாரணையை மேற்கொள்ளும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.