காசாங்காடு அமிர்தலிங்கம்.
அறுசுவைகள் ஒன்றொன்றும் அதற்குண் டான
*அவயவத்தை ஆட்டுவிக்கும் அதிச யத்தை
ஒருசுவையை தனித்தனியாய் அதிகம் உண்டால்
உணர்ந்திடலாம் இனிப்பதனை அதிகம் தின்றால்
மறுகணமே தலைநடுங்கும், காரம் உண்டால்
மடல்கொண்ட செவியடைக்கும் காண்பீர் அன்றோ!
சிறுதுண்டு புளிமாங்காய் உண்டோ மானால்
சிறிதாகிக் கண்ணிரண்டும் கூசும் தானே!
* [அவயவம் = உடலுறுப்பு]
அருஞ்சுவையாம் துவர்ப்பைநாம் உண்ணும் போது
அடித்தொண்டை கமருதலைக் அறிவோம் நாமும்
விருப்புற்று தனியுப்பைச் சுவைத்துப் பார்க்க
விளைவுடனே வாந்திவரும் உண்ணல் ஆகா
பொறுப்பற்ற மனிதரெலாம் கசப்பை உண்ணார்
போகின்ற வழிமுழுதும் பூச்சி கொல்லும்!
விருத்தங்கள் கசக்குமெனும் கவிஞன் போலே
விளங்காமல் விருந்துண்ணல் சரியே யாமோ!
ஆகையினால் சுவையாறும் அவைக்குண் டான
அவயவத்தின் தொடர்புகளை ஆட்சி செய்யும்
நோகையிலே அறிந்திடலாம் வாழ்வில் நாமும்
நோகாமல் சுவைத்தசுவை மூலம் என்று,
வேகையிலே சுவையாறும் சமன்செய் தாலே
விதவிதமாய் வருநோய்கள் அண்டா தென்று
தோகைமயி லானஅன்னை சொல்லச் சொல்லத்
தோன்றுமிறைப் படைப்புகளின் சூட்ச மங்கள்!
.png)



English (US) ·