ஆசியான் இணைந்து செயல்படுவதால் சவால்களை திறம்படச் சமாளிக்க முடியும்: பிரதமர் வோங்

1 hour ago 9

f7cd31a5-28bd-435f-821e-d5989540bbad

ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்குப் பிறகு மே 9ஆம் தேதி செபுவில் உள்ள ஷாங்ரிலா ஹோட்டலில் சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: சாவ் பாவ்

உலகை தற்போது எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் இடையூறுகளையும் ஆசியான் இணைந்து செயல்படுவதால் திறம்படச் சமாளிக்க முடியும் என்று சனிக்கிழமை (மே 9) பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

ஏற்கெனவே இதற்கான ஒற்றுமையை 11 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பின் தலைவர்கள் வெளிப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“ஆசியானை வலுவாகவும் ஒற்றுமையாகவும் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்து அவற்றை தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிலிப்பீன்சின் செபு நகரில் நாள் முழுதும் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்குப் பிறகு மத்திய கிழக்கு நிலவரம் குறித்து கூட்டு அறிக்கை ஒன்றையும் கடல்சார் ஒத்துழைப்பு குறித்து ஒரு பிரகடனத்தையும் ஆசியான் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது பயணத்தின் முடிவில் திரு வோங் சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசினார்.

“நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாகப் பேசினோம். முக்கிய சவால்களில் கவனம் செலுத்தினோம். கூட்டு மீள்திறனை வலுப்படுத்த அதிகம் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டோம். குறிப்பாக எரிசக்தி, உணவுப் பாதுகாப்பில் அது முக்கியம் என்பதை ஏற்றுக் கொண்டோம். இதனால் இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.

போட்டி நிறைந்த புவிசார் அரசியல் மற்றும் உலகம் பிளவுபட்ட புதிய சூழலில் ஆசியானின் ஒற்றுமை மேலும் முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் கூறினார்.

“இது, விதிமுறைகளைவிட அதிக அதிகாரம், பொருளியலைவிடப் பாதுகாப்பு, ஆற்றலைவிட மீள்திறன் பற்றியது,” என்று அவர் தெரிவித்தார்.

“இந்தப் புதிய சூழலில் குறிப்பாக சிறிய நடுத்தர அளவுள்ள நாடுகள் சவால்களை சமாளிப்பது சிரமமாக இருக்கும். ஆனால் இணைந்து செயல்படுவதால் ஆசியான் உரத்தக் குரலாக ஒலிக்க முடியும். மேலும், எரிசக்தி, பாதுகாப்பு தொடர்பான வட்டார ஒப்பந்தங்களை அமல்படுத்துவதில் ஆசியான் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுவது ஒற்றுமையைக் காட்டுகிறது,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

இதற்கிடையே ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடலால் ஏற்பட்டுள்ள எரிசக்தித் தட்டுப்பாடு, வர்த்தக இடையூறுகளுக்கு இடையே பிரதமர் வோங்கும் பிற ஆசியான் தலைவர்களும் ஆசியான் பெட்ரோலியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் மேம்படுத்தப்பட்ட ஆசியான் பொருள்கள்மீதான வர்த்தக உடன்பாட்டையும் விரைவாக அமல்படுத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

Read Entire Article