மனிதவள அமைச்சு. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
கடந்த 2021லிருந்து 2024ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் சராசரியாக 420 நிறுவனங்கள் தகுந்த வேலை அனுமதியில்லாத வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தன.
அவற்றில் சுமார் 200 நிறுவனங்கள் மீது ஆண்டுதோறும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக இக்குற்றத்தை முதல்முறை புரிந்த நிறுவனங்கள், குறுகிய காலத்துக்கு அனுமதியில்லாத வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது, அனுமதியில்லாத வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் தனிநபர்களுக்கும் பொருந்தும்.
மனிதவள அமைச்சு திங்கட்கிழமை (அக்டோபர் 13) இத்தகவல்களை வெளியிட்டது. தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சு பதிலளித்தது.
“வெளிநாட்டு ஊழியர்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அவர்களுக்குத் தகுந்த வேலை அனுமதி இருப்பதை உறுதிசெய்யவேண்டும். இது புதிய விதிமுறை அல்ல,” என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இக்குற்றத்தைப் புரிவோருக்குத் தண்டனை விதிக்கும்போது பல்வேறு அம்சங்கள் கருத்தில்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். குற்றம் எவ்வளவு காலத்துக்குப் புரியப்பட்டது, எத்தனை ஊழியர்கள் சட்டவிரோதமாக வேலை செய்கின்றனர் போன்ற அம்சங்கள் அவற்றில் அடங்கும்.
சுற்றுப்பயண, மாணவர் விசாவை வைத்திருப்போர் சிங்கப்பூரில் படைப்பாற்றல் சேவைகளை (creative services) வழங்க அனுமதி கிடையாது என்று கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி மனிதவள அமைச்சும் ஒளி, ஒலிபரப்புத், படைப்பாற்றல் நிபுணர்கள் சங்கமும் (சிங்கப்பூர்) கூட்டறிக்கையில் தெரிவித்தன. தங்களிடம் புகார் வருவதைத் தொடர்ந்து தகவல் ஆய்வு முறைகள் (data analytics) மூலம் சோதனை நடத்தி விசா விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள்/தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மனிதவள அமைச்சு எடுத்துரைத்திருந்தது.
தகுந்த வேலை அனுமதியின்றி சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டவருக்கு 20,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது அதிகபட்சமாக ஈராண்டுச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அவர்களுக்கு மறுபடியும் சிங்கப்பூர் வரவோ இங்கு வேலை செய்யவோ தடை விதிக்கப்படலாம்.
நிறுவனங்களுக்கும் 30,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது 12 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வேலை அனுமதியில்லாத வெளிநாட்டவரை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள், தனிநபர்கள் இரு தரப்புக்கும் இது பொருந்தும்.