இணைய விற்பனை உத்திகளைக் கற்றுக்கொள்ளச் சில்லறை வணிகர்களுக்கு வாய்ப்பு

1 hour ago 14

c8bdb439-3150-4f2e-971e-8527fd28d6a7

ஊழியர்களுக்குச் சமூக ஊடக வர்த்தக நடவடிக்கைகளில் மறுபயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில்லறை வணிகர் சங்கம், டிக்டாக், சிங்கப்பூர் ஊழியரணி ஆகியவை கையெழுத்திட்டன. - படம்: சில்லறை வணிகர் சங்கம்

“வாடிக்கையாளர்கள் ஆடை எப்படிப் பொருந்துகிறது என்பதைப் பார்ப்பது மிகவும் அவசியம்.”

“முக்கியமாக ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்.”

“புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இளைய தலைமுறையினரை வேலைக்கு எடுப்பதும் சில்லறை வர்த்தக ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் அவசியம்.”

நவீன ஆடைகளை வடிவமைக்கும் அனா ரெயின் ஹோல்டிங்சின் நிறுவநரும் இயக்குநருமான திருவாட்டி அனுபமா சிங்காலின் கருத்துகள் அவை.

55 வயது திருவாட்டி அனுபமாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்தது திங்கட்கிழமை (மார்ச் 30) அவர் கலந்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியொன்று.

ராஃபிள்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் சில்லறை வணிகர் சங்கம், டிக்டாக், சிங்கப்பூர் ஊழியரணி ஆகியவை பங்கேற்றன.

வணிகர்களுக்குச் சமூக ஊடக வர்த்தக நடவடிக்கைகளில் மறுபயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவை கையெழுத்திட்டன.

விழாவில் தேசிய வளர்ச்சி, வர்த்தக தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் உரையாற்றினார்.

“வாடிக்கையாளர்கள் இப்போது பரிவர்த்தனையை மட்டும் எதிர்பார்க்கவில்லை; அவர்கள் நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

“சமூக வர்த்தகம் என்பது உள்ளடக்கம், சமூகம், வணிகம் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. இது கட்டமைப்பு அளவிலான மாற்றம். புதிய ஒப்பந்தத்தின் மூலம், சில்லறை வணிகர்கள் தரவுப் பகுப்பாய்வு, புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும், சமூக வர்த்தகத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறவும் வழிவகை செய்யப்படும்,” என்றார் திரு ஆல்வின் டான்.

நேரலைப் படைப்பாளர், விற்பனை நிபுணர், தொழில்நுட்பப் பொறியாளர் ஆகிய மூன்று முக்கிய வேலைகளில் புதிய முயற்சி கவனம் செலுத்துகிறது.

ஷிசெய்டோ, ஓசிம், யங் ஹங்ரி ஃப்ரீ போன்ற முன்னணி நிறுவனங்கள் நேரலை விற்பனைக் கூடங்களை அமைத்திருந்தன. பொருள்களைக் காட்சிக்கு வைத்ததோடு விளம்பர உத்திகளையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டன.

Read Entire Article