இணையவழி மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000 வரை இழப்பீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

13 hours ago 18

4119565b-57bb-474d-8485-6af8541b55d3

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா. - படம்: இபிஏ

மும்பை: இணையவழிப் பண மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு, வங்கி வாயிலாக 25,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

மும்பையில் நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் நடைபெற்ற இணையவழி மோசடிகளால் ஏறக்குறைய 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதனால் 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைக் கருத்தில்கொண்டு, இணையவழி மோசடிகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் மூன்று வரைவுக் கொள்கைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

2017ஆம் ஆண்டு வழிகாட்டுதலின்படி, இழப்புகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பேற்க வேண்டிய நிலை இருந்தது. அதனை மாற்றி, மோசடியால் பணத்தை இழக்கும் நபருக்குச் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் சார்பில் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப் புதிய கொள்கையில் வழிவகை செய்யப்படும்.

மேலும், முதியவர்கள் இத்தகைய மோசடிகளில் சிக்குவதைத் தவிர்க்க, அவர்கள் மேற்கொள்ளும் இணையவழிப் பணப் பரிமாற்றங்கள் சற்றே தாமதமாக நடைபெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

வாடிக்கையாளர்களிடம் கடனை வசூலிக்கும்போது மூன்றாம் தரப்பினர்மூலம் நெருக்கடி கொடுப்பதைத் தடுத்து, நியாயமான முறையில் கடனை வசூலிக்கவும் புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும்.

நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், அந்த வங்கிகளில் பணிபுரியும் 1.4 லட்சம் ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன் வரம்பை அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளியல் வளர்ச்சி சிறப்பாக உள்ளதால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை; அது 5.25 விழுக்காடாகவே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியிலும் மாற்றம் இருக்காது.

இந்தியா - அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள வணிக ஒப்பந்தத்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்றும், 2026ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 விழுக்காடாகவும், பணவீக்கம் 2.1 விழுக்காடாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article