மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. - கோப்புப் படம்: பிடிஐ
புதுடெல்லி: சத்தீஸ்கரில் இவ்வாண்டு இதுவரை 1,000க்கும் அதிகமான மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஓராண்டில் இத்தனை மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்ததில்லை.
மத்திய அரசாங்கம், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் இடது சாரி தீவிரவாதத்தை ஒழிக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கான முயற்சிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் இந்தப் புள்ளிவிவரம் வெளிவந்துள்ளது.
இவ்வாண்டு இதுவரை 1,040 மாவோயிஸ்ட் ஆர்வலர்கள் சரணடைந்திருப்பதாகக் காவல்துறைப் புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டுப் பதிவான 881ஐக் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.
மத்திய, மாநில அரசாங்கங்களின் பாதுகாப்புப் படையினர் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த ஈராண்டுகளில் சரணடைந்த மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு 344 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்தனர். 2021ல் இந்த எண்ணிக்கை 544ஆகவும் 2022ல் 417ஆகவும் 2023ல் 414ஆகவும் பதிவானது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தங்களுக்கு விதித்துள்ள கெடு முடிய ஆறு மாதங்களுக்கும் குறைவான காலம் இருக்கும் வேளையில் இவ்வாண்டு இறுதியில் இதுவரை இல்லாத அளவில் மாவோயிஸ்ட்டுகள் சரணடைவர் என்று பாதுகாப்புப் படையினர் எதிர்பார்க்கின்றனர்.
தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத காவல்துறையினர் சிலர், இவ்வாரம் மேலும் சில நடுநிலை, உயர்மட்ட ஆர்வலர்கள் சரணடைவர் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகத் குறிப்பிட்டனர்.
வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாநிலம் உருவான தினத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சத்தீஸ்கருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதனை முன்னிட்டு மேலும் சில மாவோயிஸ்ட்டுகள் சரணடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக அண்மையில் இம்மாதம் எட்டாம் தேதி குறைந்தது 16 மாவோயிஸ்ட் ஆர்வலர்கள் நாரான்பூர் மாவட்ட காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவினரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.