Last Updated:October 13, 2025 9:15 PM IST
கரூர் தவெக நிகழ்வில் பாதிக்கப்பட்டுள்ள ஷர்மிளா, செல்வராஜ் ஆகிய இருவரும் வாதாட வழக்கறிஞரை ஏற்படுத்தி தர வேண்டும் என இலவச சட்ட உதவி மையத்தில் மனு அளித்துள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்காக வாதாட சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞரை ஏற்படுத்தி தருமாறு, நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தாய், மனைவியை இழந்த கணவர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 வயது சிறுவன் ப்ரித்திக், சந்திரா உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோர் பெயர்களில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், மகனின் இறுதிச் சடங்கிற்கு கூட வராத தனது கணவர், சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடுத்திருப்பதாக சிறுவனின் தாயார் ஷர்மிளா நியூஸ் 18-க்கு அளித்தப் பேட்டியில் குற்றஞ்சாட்டியிருந்தார். இதேபோன்று, தன்னை ஏமாற்றி கையெழுத்து பெறப்பட்டதாக செல்வராஜும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது இருவரும் காணொளி வாயிலாக ஆஜராகினர். அப்போது, தங்களது ஆலோசனை இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தங்களுக்காக வாதாட வழக்கறிஞரை ஏற்படுத்தி தர வேண்டும் என இலவச சட்ட உதவி மையத்தில் மனு அளித்தனர்.
இதனிடையே, மனுதாரர்களுக்கு தெரியாமலேயே சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய மோசடி என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், போலி மனுத்தாக்கல் செய்த விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்த பின்னர் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்தனர்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :
October 13, 2025 9:15 PM IST