என் பாத்திரம்தான் என் அடையாளம்: ஷ்ரத்தா ஸ்ரீநாத்

21 hours ago 11

‘காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, ‘விக்ரம் வேதா’ படத்தின் ‘ஹேய் நெஞ்சாத்தியே’ பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

‘நேர்கொண்ட பார்வை’ போன்ற படங்களில் துணிச்சலான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, தனக்கென ஒரு தனி வழியைப் பின்பற்றி வரும் அவர், தமிழக வார இதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

“டூயட் பாடி, அழகாகக் காட்சி தரும் வழக்கமான நாயகியாக வலம் வருவதில் தனக்கு உடன்பாடில்லை,” என்று கூறுகிறார் ஷ்ரத்தா.

“படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களின் மனத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்ற நடிகையின் முகத்தைவிட, அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ஆழமாகப் பதிய வேண்டும். அதுவே எனது உண்மையான வெற்றியாக நான் நினைக்கிறேன்,” என்கிறார்.

தற்போது ஷ்ரத்தா ‘த கேம்: யூ நெவர் பிளே அலோன்’ என்ற புதிய இணையத் தொடரில் நடித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ‘வீடியோ கேம்’ துறையில் ஒரு பெண் எப்படித் தன் திறமையால் உச்சம் தொடுகிறாள், அதனால் அவள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதுதான் இந்தக் கதையின் மையக் கரு,” என்றார்.

நிஜ வாழ்க்கையில் வன்முறை விளையாட்டுகளைத் தவிர்த்து, மூளைக்கு வேலை தரும் புதிர் விளையாட்டுகளை விரும்பி விளையாடுவதாகவும் சொல்கிறார்.

திரையுலகில் நுழைவதற்கு முன்பு ஷ்ரத்தா ஒரு வழக்கறிஞர். அந்தப் படிப்பு, திரையுலகில் தனக்குப் பெரும் பலமாக இருக்கிறதாம்.

“என் படங்களுக்கான ஒப்பந்தங்களை நானே சட்ட ரீதியாக முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்வேன். சில சமயம், கதை விவாதங்களில் கூட ஒரு வழக்கறிஞரைப் போல கேள்விகள் கேட்டு, சில காட்சிகளை மாற்றவும் காரணமாக இருந்திருக்கிறேன்,” என்கிறார்.

கிசுகிசுக்களில் சிக்காமல், தன் தனிப்பட்ட வாழ்க்கையை நேர்த்தியாகக் கையாள்வதற்கும் இந்தச் சட்டப் பின்னணி உதவுவதாக அவர் நம்புகிறார்.

ஒரு சட்டப் பட்டதாரியாகப் பெண்ணியம் குறித்த பார்வை ஆழமானது. “முன்பு என் பாட்டி, அம்மா தலைமுறையினர் பல விஷயங்களைச் சகித்துக்கொண்டு வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைய பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

“தனக்கு விருப்பமில்லாத ஒரு விஷயத்திற்கு ‘நோ’ சொல்லும் தைரியம் வந்திருக்கிறது. அந்த ‘நோ’ சொல்வதற்கான காரணத்தை ஆண்களும் சமூகமும் புரிந்துகொள்ளும் நாளில் தான் உண்மையான சமத்துவம் பிறக்கும்,” என்கிறார்.

கல்வி, சம வேலைக்கு சம ஊதியம், சம உரிமை ஆகியவையே உண்மையான பெண்ணியத்தின் அடித்தளம் என்பது அவரது கருத்து.

“ஓர் ஆணிடம் ஏமாற்றும் குணம் இருக்கக் கூடாது. அதே சமயம், தன் உடல் ஆரோக்கியத்தில் துளியும் அக்கறையில்லாத ஆண்களை எனக்குப் பிடிக்காது. காரணம், தன் மீதே அக்கறை இல்லாத ஒருவர், எப்படி உறவில் இருக்கும் மற்றொருவருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்?” என்று அழுத்தமாகக் கேட்கிறார் ஷ்ரத்தா.

தற்போது தமிழில் விஷ்ணு விஷாலுடன் ‘ஆர்யன்’, ரவி மோகனுடன் ‘புரோ கோட்’ மற்றும் கன்னடத்தில் ‘ருத்ரபிரயாக்’ என அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளன.

மொத்தத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெறும் நடிகையாக மட்டுமல்லாமல் தெளிவான சிந்தனையும் சமூகப் பார்வையும் கொண்ட ஒரு நவீனப் பெண்ணாகத் தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.

Read Entire Article