Last Updated:October 13, 2025 11:06 AM IST
மதராஸி திரைப்படம் படுதோல்வி அடைந்ததாக சல்மான் கான், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை சீண்டியுள்ளார். என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது ‘தர்பார்’. ரஜினி நடித்த இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்தப் படத்துக்குப் பின் 4 ஆண்டுகள் கழித்து முருகதாஸ் இயக்கத்தில் வெளியானது இந்திப் படமான ‘சிக்கந்தர்’. சல்மான் கான் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்தார். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.
படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களால் பாக்ஸ் ஆஃபீஸில் தோல்வி அடைந்தது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்தப் படம் ஏன் தோல்வியைத் தழுவியது என்பது குறித்த காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “சிக்கந்தர் படப்பிடிப்பில் பல நெருக்கடிகள் இருந்தன. சல்மான் கானுக்கு மிரட்டல் இருந்ததால் அவரை வைத்து பகலில் படப்பிடிப்பு நடத்த முடியாது. இரவில் தான் படப்பிடிப்பு நடத்த முடியும். பகல் காட்சியாக இருந்தாலும், அதனை இரவில் தான் படமாக்க முடியும்.
எல்லாமே கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸிலும், க்ரீன் மேட்டிலும் எடுக்க வேண்டியதாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கும் தாமதமாக தான் வருவார். என்ன செய்ய முடியும்? ஆனால் இந்தப் படத்தின் கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது” என்று வேதனையுடன் தெரிவித்தார். இது பெரிய அளவில் பேசுபொருளானது. ‘சிக்கந்தர்’ தோல்விக்கு சல்மான்கான் முக்கியமான காரணம் என கூறப்பட்டது.
சிக்கந்தர் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் ‘மதராஸி’ படத்தை இயக்கினார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியானது ‘மதராஸி’ திரைப்படம். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார்.
இந்நிலையில், ‘சிக்கந்தர்’ தோல்விக்கு இரவு ஷூட்டிங் வைத்ததே காரணம் எனக் கூறிய ஏ.ஆர்.முருகதாஸுக்கு நடிகர் சல்மான் கான் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காமெடியன் குப்தா கலந்துகொண்டார். அவருடன் சல்மான்கான் உரையாடினார்.
அப்போது சமீபத்தில் நீங்கள் நடித்த படங்களில் ஏன் நடித்தோம் என உணர வைத்த படம் எது என குப்தா கேட்டார். அதற்கு பதிலளித்த சல்மான், “அப்படி அண்மையில் எந்தப் படம் குறித்தும் நான் நினைத்ததில்லை. ஆனால் மக்கள் ‘சிக்கந்தர்’ படம் குறித்து எதிர்மறையாக கூறுகின்றனர். ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ளமாட்டேன். சிக்கந்தர் படத்தின் ஒன்லைன் மிகச்சிறப்பானது.
ஆனால் நான் படப்பிடிப்பில் இரவு 9 மணிக்கு தான் கலந்துகொள்வேன். அது பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அதை தான் சொன்னார். அப்போது எனது விலா எலும்பு உடைந்திருந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அண்மையில் ஒரு படம் வெளியானது. அந்தப் படத்தின் நாயகன் காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார்.
‘மதராஸி’ என்ற பெரிய படத்தை அவர் இயக்கினார். ஆனால், அதே சமயம் அந்தப் படம் பெரிய அளவில்…” என சிரித்த படியே நிறுத்திக்கொண்டார். மேலும், “மதராஸி, சிக்கந்தர் படத்தை விட பெரிய ப்ளாக்பஸ்டர் ஆகிவிட்டது” என கிண்டலாக படத்தின் தோல்வி குறித்து விமர்சித்துள்ளார் சல்மான் கான். இதன் மூலம் ஏ.ஆர்.முருகதாஸின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் சல்மான்.