ஒரு லட்சம் ஓராசிரியர் பள்ளிகளில் 33 லட்சம் மாணவர்கள்

21 hours ago 9

027e69bd-a168-4c42-a9ef-503b7c4a7035

கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி, தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் (30:1), உயர்நிலைப்பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் (35:1) இருக்கவேண்டும்.  - படம்: இந்தியா டுடே

புதுடெல்லி: இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வருவதாகவும் இந்தப் பள்ளிகளில் 33 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சின் அண்மைய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.

2024-25 கல்வியாண்டின்படி, நாடு முழுவதும் 104,125 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன. இந்தப் பள்ளிகளில் மொத்தமாக 33,76,769 மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்கின்றனர்.

இதன்மூலம், சராசரியாக ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் 34 மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் சூழல் நிலவுகிறது.

கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி, தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் (30:1), உயர்நிலைப்பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் (35:1) இருக்கவேண்டும்.

ஆனால் ஓராசிரியர் பள்ளிகளில், ஒரே ஆசிரியர் பல வகுப்புகளுக்குப் பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் கல்வியின் தரம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஓராசிரியர் பள்ளிகள் ஆந்திரப்பிரதேசத்தில் (12,912 பள்ளிகள்) உள்ளன.

அதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசம் (9,508), ஜார்க்கண்ட் (9,172), மகாராஷ்டிரா (8,152), மற்றும் கர்நாடகா (7,349) ஆகியவை உள்ளன.

புதுச்சேரி, லடாக், சண்டிகர் போன்ற யூனியன் பிரதேசங்களில் ஓராசிரியர் பள்ளிகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருவது ஒரு ஆறுதலான செய்தி. 2022-23ல் 118,190ஆக இருந்த இந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 110,971 ஆகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து விளக்கிய கல்வி அமைச்சின் மூத்த அதிகாரி, “பள்ளிகளைச் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஓராசிரியர் பள்ளிகள் கற்றல்-கற்பித்தல் சூழலுக்குத் தடையாக உள்ளன.

“எனவே, குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைத்து இந்த எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி செய்து வருகிறோம்.

“இந்த நடவடிக்கைகள் மூலம் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதே அரசின் நோக்கம்,” என்று குறிப்பிட்டார்.

Read Entire Article