கடல் அலைகளுடன் வந்த சிலுவை... கப்பல் வடிவில் உலகை கவரும் உவரி கப்பல் மாதா ஆலயம்

16 hours ago 9

Last Updated:Jul 20, 2026 1:45 PM IST

கப்பல் வடிவில் காட்சியளிக்கும் உவரி கப்பல் மாதா ஆலயம், கடற்கரையில் அமைந்துள்ள நம்பிக்கையின் பிரபல ஆன்மிகத் திருத்தலமாக பக்தர்களை ஈர்த்து வருகிறது.

+

News18

News18

தூத்துக்குடி மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருச்செந்தூர், மணப்பாடு உள்ளிட்ட புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களின் வரிசையில், அவற்றிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உவரி கப்பல் மாதா ஆலயம் பக்தர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ளது. கடற்கரையை ஒட்டிய இயற்கை எழிலுடன், கப்பல் வடிவில் அமைந்துள்ள இந்த ஆலயம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்களை ஈர்த்து வருகிறது.

தொடக்கத்தில் சிறிய கெபியாக மட்டுமே இருந்த இந்த வழிபாட்டுத் தலம், காலப்போக்கில் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாலும், மாதாவின் அருளால் நடைபெற்றதாக பக்தர்கள் நம்பும் பல்வேறு அனுபவங்களாலும் இன்று பிரபலமான திருத்தலமாக வளர்ந்துள்ளது. ஆலயத்தின் தனித்துவமான கப்பல் வடிவ அமைப்பும், அதன் மேற்பகுதியில் விமான வடிவில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடமும் இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்புகளாக திகழ்கின்றன.

குழந்தை பாக்கியம், உடல்நலம், தொழில் முன்னேற்றம், குடும்ப நலன் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுடன் வரும் பக்தர்கள், தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதாக நம்பிக்கையுடன் சாட்சியமளித்து வருகின்றனர். இதனால், இந்த ஆலயம் "நம்பிக்கையின் ஆலயம்" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. தினமும் மாலை நடைபெறும் ஜெப வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுகின்றனர்.

ஆலயத்தின் வரலாறு குறித்து உவரியைச் சேர்ந்த எஸ்கலின் கூறுகையில், "முதலில் இங்கு ஒரு சிறிய கெபி மட்டுமே இருந்தது. அதே இடத்தில் ஒரு சிறிய பள்ளிக்கூடமும் செயல்பட்டு வந்தது. பின்னர் கடல் அரிப்பால் அந்த பள்ளிக்கூடம் பாதிக்கப்பட்டதால், மக்கள் மாதாவை அந்த சிறிய கெபியில் வைத்து வழிபட்டு வந்தனர். அதன் பிறகு, மாதா கனவில் அருள் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, எங்கள் உறவினர்களும் ஊர் மக்களும் இணைந்து இந்த ஆலயத்தை உருவாக்கினர்.

சாதாரண மேஸ்திரியால் கட்டப்பட்ட இந்த ஆலயம் இயற்கையாகவே கப்பல் வடிவத்தைப் பெற்றது. பின்னர் அதன் மேற்பகுதியில் விமான வடிவ அமைப்பும் உருவாக்கப்பட்டது. தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஜெப வழிபாடு நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம், நோய் தீர்வு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுடன் வரும் பக்தர்களுக்கு மாதா அருள் புரிவதாக நம்பிக்கை நிலவுகிறது. அதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர். பழைய விமான வடிவ மேல்தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது காணப்படும் புதிய விமான வடிவ அமைப்பு கட்டப்பட்டது. இன்றும் நம்பிக்கையுடன் வரும் யாரையும் மாதா கைவிடமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது" என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read Entire Article