ஜெருசலம்/கெய்ரோ: பாலஸ்தீன கிளர்ச்சி குழுவான ஹமாஸ், உயிருடன் உள்ள ஏழு இஸ்ரேலியப் பிணையாளிகளை திங்கட்கிழமை (அக்டோபர் 13) விடுவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னெடுத்த சண்டைநிறுத்த உடன்பாட்டின் முதற்கட்டமாக அவர்கள் விடுதலையாயினர்.
அந்த ஏழு பிணையாளிகளும் செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்துலகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரி குறிப்பிட்டார்.
எஞ்சியுள்ள 13 பிணையாளிகளும் விடுவிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிவது.
அதையடுத்து, 28 இஸ்ரேலியப் பிணையாளிகள் ஒப்படைக்கப்படுவர். அவர்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஒருவரின் நிலை என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை.
காஸா போர் நிறுத்தம் தொடர்பிலான புதிய உடன்பாட்டின்கீழ் இஸ்ரேல் தடுத்து வைத்திருந்த கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீனக் கைதிகளையும் குற்றவாளிகளையும் சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும்.
டெல் அவிவ் சதுக்கத்தில் மக்களின் உற்சாகம் கரைபுரண்டது. - படம்: இபிஏ
அந்த வகையில், இஸ்ரேலியச் சிறைகளிலிருந்து 1,966 கைதிகள் பேருந்துகளில் ஏறி காஸாவின் நாசர் மருத்துவமனையில் திங்கட்கிழமை (அக்டோபர் 13) இறக்கிவிடப்படுவர் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட காணொளியில் ஹமாஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் கறுப்பு உடை அணிந்த துப்பாக்கிக்காரர்கள் நாசர் மருத்துவமனைக்கு வந்ததைக் காண முடிகிறது.
டெல் அவிவின் பிணையாளிகள் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேலியக் கொடிகளைக் கையில் ஏந்தி அசைத்து பிணைக் கைதிகளின் புகைப்படங்கள் கொண்ட பதாகைகளைப் பிடித்தனர்.
“போர் முடிவுக்கு வந்துவிட்டது,” என்று வாஷிங்டனிலிருந்து இஸ்ரேலுக்குப் புறப்பட்ட திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.
(வலக்கோடி) இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ, (வலமிருந்து இரண்டாவது) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைப் பென் குரியோன் விமான நிலையத்தில் வரவேற்றார். - படம்: ஏஎஃப்பி
காஸாவுக்குத் திட்டங்கள் குறித்த கேள்விக்கு, “அது வழக்கநிலைக்குத் திரும்பும் என்று நினைக்கிறேன்,” என்று திரு டிரம்ப் பதிலளித்தார்.
திரு டிரம்ப்புக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றம் வீரருக்குரிய வரவேற்பை அளிக்கவிருக்கிறது.
இவ்வாண்டுக்கான இஸ்ரேலின் உன்னத குடிமகன் விருதும் அவருக்குக் கொடுக்கப்படும் என்றார் இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சோக்.