சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு – திமுக வெளியிட்ட அறிவிப்பு

1 hour ago 11

Last Updated:May 10, 2026 6:58 PM IST

தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின், துணைத் தலைவராக கே.என்.நேரு ஆகியோர் தேர்வு.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

திமுக சட்டமன்றக் கட்சியின் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தவெக தனி பெரும் கட்சியாக 108 இடங்களை வென்றிருந்தும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக கோரியது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் முதல் கட்சியாக தவெகவுடன் கூட்டணி வைத்தது.

அதேசமயம், திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம், தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்தது. இதனையடுத்து இன்று காலை நேரு உள்விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இதற்கிடையில் கடந்த 7ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸுக்கு கண்டனம், முடிவெடுக்கும் அதிகாரம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கே என்பன உட்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய் தலைமையில் புது அரசு பதவி ஏற்றதைத் தொடர்ந்து, நாளை சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு திமுக சட்டமன்றக் கட்சியின் தலைவர், துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட விவரங்களை திமுக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 07-05-2026 மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலினும், துணைத் தலைவராக கே.என்.நேருவும், கொறடாவாக எ.வ. வேலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article