சாதிக்க வயது தடையில்லை!

5 hours ago 10

முழுநேரப் பணி, குடும்பப் பொறுப்புகள் எனத் தொடர்ந்து சுழலும் அன்றாட வாழ்க்கைக்கு மத்தியில், கலை மீதான தாகத்தைத் தணித்துக்கொள்வது பலருக்கும் சவாலான ஒன்று.

ஆனால், கல்வி அமைச்சில் காட்சிக்கலை, நிகழ்த்துகலை இணைப்பாட நடவடிக்கை அதிகாரியாக பணிபுரியும் 40 வயது ஷெரின் ஜீவிதா ஜோசப், இந்தச் சவாலைச் சாதனையாக மாற்றித் தம் 10 வயது மகளுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

இவ்வாண்டு ஜனவரி 25ஆம் தேதி சிவில் சர்விஸ் கிளப் உள்ளரங்கில் தமது மோகினியாட்ட அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடித்தார் திருவாட்டி ஷெரின். மறைந்த குரு வசந்தா காசிநாத்திடம் தமது நடனப் பயணத்தை ஐந்து வயதில் தொடங்கிய இவருக்கு, கலை உலகில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகால அனுபவம் உண்டு.

இவ்வாண்டு ஜனவரி 25ஆம் தேதி சிவில் சர்விஸ் கிளப் உள்ளரங்கில் தமது மோகினியாட்ட அரங்கேற்றத்தை திருவாட்டி ஷெரின் ஜீவிதா ஜோசப் வெற்றிகரமாக முடித்தார்.

இவ்வாண்டு ஜனவரி 25ஆம் தேதி சிவில் சர்விஸ் கிளப் உள்ளரங்கில் தமது மோகினியாட்ட அரங்கேற்றத்தை திருவாட்டி ஷெரின் ஜீவிதா ஜோசப் வெற்றிகரமாக முடித்தார். - படம்: த.கவி

பின்னர், பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் மறைந்த குரு சாந்தா பாஸ்கர், குரு மீனாட்சி பாஸ்கர் ஆகியோரின் வழிகாட்டுதலில் அவர் பரதநாட்டியம் பயின்றார்.

2010ஆம் ஆண்டில் பரதநாட்டிய அரங்கேற்றம் கண்ட திருவாட்டி ஷெரின், பல்வேறு கலை விழாக்கள், மேடை நிகழ்ச்சிகள், ஆலயங்களில் நடனமாடியுள்ளார். தொடர்ந்து புதிய கலைகளைக் கற்கும் ஆர்வத்தில் திருவாட்டி இந்து விஜய்யிடம் ஒடிசி நடனத்தையும் பயின்றார்.

நீண்டகால நடனப் பின்னணி இருந்தாலும், நளினமான மோகினியாட்டத்தைக் கற்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் ஆழமாக வித்திட்டது.

“வாழ்க்கை எந்தவிதப் பரபரப்புமின்றி மெதுவாகச் செல்வதுபோல் தோன்றியபோது, எனக்குச் சவாலான, புதுமையான ஒன்று தேவைப்பட்டது. புதிய முயற்சிகளின் மூலம் எனது எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்ள விரும்பினேன்,” என்று அவர் கூறினார்.

அதன் தொடர்ச்சியாகவே, கேரள கலாமண்டலத்தின் மோகினியாட்டத் துறை முன்னாள் தலைவர் குரு கலாமண்டலம் புஷ்பலதாவிடம் மோகினியாட்டத்தைக் கற்றுக்கொண்டார்.

தமது மோகினியாட்ட அரங்கேற்றத்திற்கு பிறகு மேடையில் திருவாட்டி ஷெரின் ஜீவிதா ஜோசப், அவரது மகள் அஞ்சனா ஸ்ரீ கணேஷ் (வலது), மோகினியாட்ட குரு கலாமண்டலம் புஷ்பலதா (இடது).

தமது மோகினியாட்ட அரங்கேற்றத்திற்கு பிறகு மேடையில் திருவாட்டி ஷெரின் ஜீவிதா ஜோசப், அவரது மகள் அஞ்சனா ஸ்ரீ கணேஷ் (வலது), மோகினியாட்ட குரு கலாமண்டலம் புஷ்பலதா (இடது). - படம்: த.கவி

திருவாட்டி ஷெரினின் முயற்சி, ஒரு தாயின் விடாமுயற்சி தன் பிள்ளைக்கு எப்படி ஊக்கமாக அமையும் என்பதற்குச் சான்று. பரதநாட்டியம் பயிலும் இவரது மகள் அஞ்சனா ஸ்ரீ கணேஷ், 10, தம் தாயின் கடின உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவர்.

வாழ்க்கைச் சவால்களை விடாமுயற்சியால் வெல்லலாம் என்பதை தம் அம்மாவிடமிருந்தே கற்றுக்கொண்டதாக அஞ்சனா குறிப்பிட்டார்.

பத்து வயது மகள் அஞ்சனா ஸ்ரீ கணே‌ஷுடன் திருவாட்டி ஷெரின் ஜீவிதா ஜோசப், 40.

பத்து வயது மகள் அஞ்சனா ஸ்ரீ கணே‌ஷுடன் திருவாட்டி ஷெரின் ஜீவிதா ஜோசப், 40. - படம்: ஸ்ரீ கணேஷ்

“நடன ஒத்திகையின்போது அம்மா எப்போதாவது தவறு செய்துவிட்டால், சோர்வடையாமல் ‘முதலிலிருந்து மீண்டும் ஆடலாம்’ என்று கூறித் தொடர்ந்து ஆடுவார்,” எனத் தாயைப் பெருமையுடன் குறிப்பிட்ட அஞ்சனா, தாயைப் பார்த்துத் தானும் தவறுகளிலிருந்து மீண்டுவரக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

திருவாட்டி ஷெரினின் ஈடுபாட்டைப் பாராட்டும் அவரது குருவான ‌ஸ்ரீ கலாமண்டலம் புஷ்பலதா, வகுப்பிலிருந்த மற்றவர்களைவிட அவர் மிக வேகமாக நடனத்தைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார். அத்துடன், தமது குருக்களிடம் திருவாட்டி ஷெரின் காட்டும் ஆழமான மரியாதையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருவாட்டி ஷெரின் ஜீவிதா ஜோசப்பும் அவரது மோகினியாட்ட குரு கேரள கலாமண்டலத்தின் மோகினியாட்டத் துறை முன்னாள் தலைவர் கலாமண்டலம் புஷ்பலதாவும்.

திருவாட்டி ஷெரின் ஜீவிதா ஜோசப்பும் அவரது மோகினியாட்ட குரு கேரள கலாமண்டலத்தின் மோகினியாட்டத் துறை முன்னாள் தலைவர் கலாமண்டலம் புஷ்பலதாவும். - படம்: த.கவி

“வயது ஒரு தடையன்று. முயற்சி செய்யாமல் இருப்பதைவிட, முயற்சி செய்து தோற்பது எவ்வளவோ மேல்,” என உறுதியாகக் கூறினார் திருவாட்டி ஷெரின்.

குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்கும் அதே வேளையில் நமக்குப் பிடித்தமானதைச் செய்வதும் அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், தமக்குள் இருக்கும் ஆசையை நிறைவேற்றும்போது மனம் மகிழ்ச்சியடையும் என நம்புவதாகக் கூறினார்.

பத்து வயது மகள் அஞ்சனா ஸ்ரீ கணே‌ஷுடன் திருவாட்டி ஷெரின் ஜீவிதா ஜோசப், 40.

பத்து வயது மகள் அஞ்சனா ஸ்ரீ கணே‌ஷுடன் திருவாட்டி ஷெரின் ஜீவிதா ஜோசப், 40. - படம்: ஸ்ரீ கணேஷ்

தம் தாயாரின் சாதனைகளைக் கண்டு, அவரைத் தம் தாய் எனக் கூறுவதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார் அஞ்சனா.

Read Entire Article