அடிக்கடி குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து ‘குளுகோஸ்’ அளவை அறிந்துகொள்வது நீரிழிவு நோயாளிகளிடம் நல்ல மாற்றங்களைத் தந்துள்ளது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
குறுகிய கால இடைவெளியில் நீரிழிவு நோயின் அளவைக் கண்காணிக்கும் புதிய வழிமுறை சிங்கப்பூரில் அந்நோயினால் பாதிக்கப்பட்டோரிடம் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
செலவினத்தைக் குறைக்கும் நீரிழிவுக் கண்காணிப்பு வில்லைகள், உள்ளூர் சுகாதாரப் பராமரிப்பில் தற்போது பயன்படுகின்றன.
சாதாரணமாக ஒரு ரொட்டித் துண்டை வெவ்வேறு மனிதர்கள் உண்ணும்போது அவரவரின் ‘குளுகோஸ்’ எனப்படும் ரத்தச் சர்க்கரை அளவு ஒரே நிலையில் அமைவதில்லை. நீரிழிவு நோயாளிகளில் ஆளுக்குஆள் அது மாறுபடும். பல காரணங்களால் அது நிகழ்கிறது.
ஒருவரின் குடல் அந்த உணவை எவ்வாறு எடுத்துக்கொள்கிறது, வயிற்றில் இயங்கும் நுண்ணுயிர்ச் சூழல், மரபியல், இன்சுலின் திரவத்தின் உணர்திறன், வாழ்க்கைமுறை போன்றவை பலவித விளைவுகளை மனித உடலில் ஏற்படுத்துகின்றன.
குளுகோஸ் அளவைத் தொடர்ந்து கண்காணிக்கும் கருவிகளின் (CGMs) அறிமுகம் ஒருவர் எவ்வாறு உடற்பயிற்சி செய்யப்போகிறார், உணவின் சர்க்கரை அளவை எந்த வகையில் கட்டுப்படுத்த விரும்புகிறார் என்ற கேள்விகளுக்கு சிறந்த விடை அளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.
சமிக்ஞைகளை வெளியிடக்கூடிய சிறிய வட்ட வடிவில் அமைந்துள்ள ‘சிஜிஎம்’ வட்டுகள் ஒரு 50 காசு நாணயத்தின் அளவே உள்ளன. அவை மேற்கரங்களின் பின்பாகத்தில் வைக்கப்படுகின்றன. அவற்றுள் சிறிய மெல்லிய நெகிழ்வுத் தன்மையுடைய உணர்வுத் திறன்கொண்ட இழைகள் உள்ளன.
ஒரு பொருத்தும் கருவியைக் கொண்டு எவ்வித வலியுமின்றி அவை ஒருவரின் கரத்தில் அணிவிக்கப்படுகின்றன.
அந்த வழிமுறை செலவினத்தைக் குறைப்பதோடு, நோயாளிகளின் வாழ்க்கை முறையிலும் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உதவியுள்ளது.
அந்த மெல்லிழைகளில் அதனை அணிபவரின் உடலிலுள்ள குளுகோஸ் நிலை அளவிடப்படும். உடலின் திசுக்களில் உள்ள சர்க்கரையின் அளவு கணிக்கப்பட்டு பிறகு நோயாளிகளின் கைப்பேசிக்கு நிகழ்நேரத்தில் அனுப்பிவைக்கப்படும்.
கைவிரல்களை சிறு ஊசியைக் கொண்டு குத்தி, அதில் வெளிவரும் ரத்தத்தை சர்க்கரை அளவுக் கருவியில் இட்டு குளுகோஸ் நிலையைக் கண்டறியும் தற்போதைய முறை அந்த நேரத்துக்கான சர்க்கரை அளவை மட்டுமே காட்டும். புதிய முறை நாள்முழுதும் உள்ள குளுகோஸ் அளவை வலியின்றி துல்லியமாக மதிப்பிட வல்லது.
விரலில் ஊசியால் குத்தி குளுகோஸ் அளவைச் சோதித்து அறிந்துகொள்வதை 51 விழுக்காட்டு நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பதாக ‘ஏபட்’ (Abbott) மருத்துவ நிலையத்தின் வட்டார மருத்துவ இயக்குநர் டாக்டர் கென்னத் லீ தெரிவித்தார். அச்செயல் அசௌகரியமானதாக இருப்பதாலும் வலியை ஏற்படுத்துவதாலும் அவர்கள் அதனை விரும்புவதில்லை என்றார் அவர்.
ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொண்டதாலோ, உடல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாலோ ஒருவரின் சர்க்கரை அளவு எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை புதிய சோதனை முறைக்கான கருவி தெளிவுபடுத்துகிறது. அதன்படி, சிஜிஎம் வழியாக முழுமையான, உடனடியான தரவுகளை நோயாளிகள் தூங்கும்போதுகூடப் பெறமுடியும்.
“இதற்கு முன் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள் பலனளிக்கவில்லை என்று கூறிவிடமுடியாது,” என்று டாக்டர் தினேஷ் மகேந்திரன் கூறினார். அவர் ‘த மெட்டபாலிக் கிளினிக்’கின் மருத்துவ இயக்குநரும் நாளமில்லாச் சுரப்பி நிபுணரும் ஆவார்.
புதிய சிகிச்சைமுறை மருந்துகளை மறுஆய்வு செய்யவும், நோயாளிகள் அவரவர் வாழ்க்கைமுறைத் தேர்வுகளைக் குறிப்பிட்ட வகையில் மாற்றி வடிவமைக்கவும் தேவையான தகவல்களை வழங்குகிறது என்றார் அவர்.
சிஜிஎம் ஒருவரின் உடல் குளுகோசை எவ்வாறு கையாள்கிறது என்பதை தெளிவுபடுத்துவதால் நீரிழிவு நோய் நிர்வாகத்தில் அது முக்கிய அங்கம் வகிக்கிறது என்று டாக்டர் தினேஷ் மேலும் குறிப்பிட்டார்.
.png)





English (US) ·