
தமிழ் சினிமா மற்றும் சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் பலர் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக மாறியுள்ளனர். அவர்களில் பலர் சினிமாவில் ஜோடிகளாக நடித்து அப்போது காதல் ஏற்பட்டு நிஜத்திலும் இணையர்களாக மாறியிருக்கின்றனர். அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா தொடங்கி இதற்கு பலரை உதாரணமாக சொல்லலாம்.
அதுவே, இதற்கு முந்தைய காலகட்டத்தில் எடுத்துக்கொண்டால், எம்.ஜி.ஆர் - ஜானகி, ஜெமினி கணேசன் - சாவித்ரி, ஏ.வி.எம். ராஜன் - புஷ்பலதா போன்ற நட்சத்திர ஜோடிகளை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இந்த நடிகர்கள் அனைவரும் பல படங்களில் காதலன்-காதலியாகவோ அல்லது கணவன்-மனைவியாகவோ நடித்தவர்கள். பின்னாளில் நிஜத்திலும் அப்படியாகவே இணைந்தனர். ஆனால், சினிமாவில் அண்ணன்-தங்கையாக நடித்த தமிழ் நடிகர் மற்றும் நடிகை நிஜத்தில் கணவன்-மனைவியாக இருந்த கதை தெரியுமா? அந்த நடிகர் யார்?
சேடபட்டி சூரியநாராயண ராஜேந்திரன் என நிஜப்பெயர் கொண்ட நடிகர் எஸ்.எஸ்.ஆர் மற்றும் அவரின் மனைவியும், நடிகையுமான சி.ஆர்.விஜயகுமாரி தான் அவர்கள். 'கைதியின் காதலி' என்ற தமிழ் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் அண்ணன் - தங்கையாக நடித்தனர். படத்திற்கான கதை மற்றும் வசனங்களை எழுதி ஏ.கே. வேலன் என்பவர் இயக்கிய இந்தப் படத்தை அவரே அருணாச்சலம் ஸ்டுடியோஸ் என்ற பேனரில் தயாரித்திருந்தார்.
ஹீரோ ஒரு ஏழை. சூழ்நிலை காரணமாக அவர் திருடும்போது பிடிபட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார். அவரது தாயார் இறந்துவிடுகிறார். அவரது சகோதரி அனாதையாகிறார். சிறையில் வெளியே வரும் ஹீரோ எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தை தேடும்போது ஒரு பெண் மீது காதல் வயப்படுகிறார்.
ஒருகட்டத்தில் அந்த காதலியும் தலைமறைவாக்கப்படுகிறார். அப்போது தனது காதலியைத் தேடி அவளைக் கண்டுபிடிக்கிறார் ஹீரோ. ஆனால் அது அவரது காதலி அல்ல, ஆனால் அவளுடைய இரட்டை சகோதரி என்பது தெரியவருகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பது கதையின் மீதி. இந்த கதையில் ஹீரோவாக எஸ்.எஸ்.ஆரும், அவரின் சகோதரியாக சி.ஆர்.விஜயகுமாரியும் நடித்திருந்தனர். 1963 ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம்.
இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்தப் படம் வெளியாவதற்கு இரண்டு ஆண்டுகள், அதாவது 1961-ல் தான் எஸ்.எஸ்.ஆரும் சி.ஆர்.விஜயகுமாரியும் காதலித்து திருமணம் செய்தனர். ஆம், கணவன் - மனைவியாக நிஜத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இருவரும் சினிமாவில் அண்ணன் - தங்கையாக நடித்தனர்.
ஏவிஎம் ஸ்டுடியோஸ் தயாரித்த 'குல தெய்வம்' படத்தில் தான் சி.ஆர்.விஜயகுமாரி முதன்முதலில் அறிமுகம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி எஸ்.எஸ்.ஆர். 'குல தெய்வம்' படம் வெளியாகும் முன்பே, விஜயகுமாரியின் தாயார் இறந்துவிட்டார். தாய் இறந்ததில் முற்றிலும் உடைந்து போய் இருந்த விஜயகுமாரியை ஆறுதல்படுத்தியவர் எஸ்.எஸ்.ஆர். பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டு தனது இதயத்திலும் வாழ்க்கையிலும் ஒரு இடத்தை கொடுத்தார்.
விஜயகுமாரியை திருமணம் செய்யும்போது எஸ்.எஸ்.ஆருக்கு ஏற்கனவே பங்கஜம் என்கிற பெண்ணோடு திருமணம் நடந்து குழந்தைகளும் இருந்தன. விஜயகுமாரியை திருமணம் செய்த எஸ்.எஸ்.ஆருக்கு ரவிக்குமார் என்கிற மகனும் பிறந்தார். ரவிக்குமார் பிறந்த பின் விஜயகுமாரியை தனது தேனாம்பேட்டை வீட்டிற்கு அழைத்துச் சென்ற எஸ்.எஸ்.ஆர், அங்கு தனது முதல் மனைவி பங்கஜத்துடன் வசிக்க வைத்தார். வளாகத்திற்குள் மூன்று வீடுகள் இருந்த நிலையில், முதல் வீட்டில் பங்கஜமும், மூன்றாவது வீட்டில் விஜயகுமாரியும் வசித்து வந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் ஜெமினிகணேசன், சாவித்திரி ஜோடிக்கு இணையாகப் பேசப்பட்டவர்கள் யார் என்றால் அது எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி ஜோடியே. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியின் மணவாழ்க்கை சிறிது காலத்திலேயே கசந்து பிரிந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் தான் பிரிய நேர்ந்ததாக ஒருமுறை அண்ணாவிடம் விஜயகுமாரி சொன்னதாக ஒரு தகவல் உண்டு. விஜயகுமாரியை பிரிந்த பின் எஸ்.எஸ்.ஆர் மூன்றாவது திருமணம் மூலம் தாமரை செல்வி என்று ஒரு பெண்ணை மணந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.