சிறையில் புதிய முன்னோடித் திட்டமாக குழந்தைகள் பராமரிப்பு மையம்

1 hour ago 9

4ad35ded-a896-49d4-bbf4-95ad08c270da

பெங்களூரு மத்திய சிறையில், பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகத்திலேயே ஒரு நவீன குழந்தைகள் பராமரிப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.  - படம்: இந்து தமிழ் திசை

பெங்களூரு: இந்தியாவில் முதன்முறையாக, சிறையில் உள்ள பெண் கைதிகளின் குழந்தைகள் நலனுக்காகப் பெங்களூரு மத்திய சிறையில் குழந்தைகள் பராமரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்து வரும் பெண் கைதிகளுடன் இருக்கும் பச்சிளம் குழந்தைகள், எந்தத் தப்பும் செய்யாமலே சிறைச் சூழலில் வளர வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது.

இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் மனநலனையும் கருத்தில்கொண்டு, கர்நாடக குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகம் ஒரு முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

அதன்படி, பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகத்திலேயே ஒரு நவீன குழந்தைகள் பராமரிப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக குழந்தைகள் பாதுகாப்பு இயக்ககத்தின் இயக்குநர் சி.வி. சினேகா கூறுகையில், “சிறை என்பது குழந்தைகளுக்கு உகந்த இடமல்ல. ஆனால், தாயிடமிருந்து அவர்களைப் பிரிக்கமுடியாத சூழலில், அவர்களுக்கேற்ற கல்வி, விளையாட்டுச் சூழலை உருவாக்கவே இந்த மையத்தைத் தொடங்கியுள்ளோம்,” என்றார்.

தற்போது இந்த மையத்தில் ஒன்பது குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூவர் வெளிநாட்டினர், மற்றவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

குழந்தைகளுக்குப் பாடம் புகட்ட இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு எழுத்துகள், எண்கள், பாடல்கள், நற்பண்புகளை வளர்க்கும் விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

இந்த மையம் ஒரு வகுப்பறையாக மட்டுமல்லாமல், குழந்தைகளுக்குப் பிடித்தமான வண்ணமயமான சுவர்கள், பொம்மைகள், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய ஒரு ‘மகிழ்ச்சியான சூழலாக’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்குரிய அந்த இறுக்கமான சூழ்நிலை குழந்தைகளின் பிஞ்சு மனத்தைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர்.

மேலும், இந்தக் குழந்தைகளுக்குத் தேவையான சத்தான உணவு, பால் மற்றும் உடனுக்குடன் மருத்துவப் பரிசோதனைகள் வழங்கவும் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சிறையில் இருக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இந்த மையத்தில் விட்டுவிட்டு தங்களின் அன்றாட வேலைகளில் ஈடுபடலாம்.

இதன் மூலம், சிறையில் பிறந்து வளரும் குழந்தைகளுக்குச் சமூகத்தின் மற்ற குழந்தைகளைப் போலவே ஆரம்பக்காலக் கல்வியும் முறையான கவனிப்பும் கிடைப்பதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.

பிற மாநிலச் சிறை நிர்வாகங்களும் இதைப் பின்பற்றும் வகையில் இது ஒரு முன்மாதிரித் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு 6 வயது நிறைவடைந்த பிறகு, அவர்களைப் பராமரிக்க உறவினர்கள் யாரும் முன்வராத பட்சத்தில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர்களின் கல்வி, பாதுகாப்பைத் தொடரவும் இயக்குநரகம் வழிவகை செய்துள்ளது.

கர்நாடக அரசின் இந்த மனிதாபிமான நடவடிக்கை, கைதிகளின் குழந்தைகள் வாழ்வில் ஒரு புதிய வெளிச்சத்தைத் தந்துள்ளது.

Read Entire Article