Last Updated:Mar 02, 2026 9:39 PM IST
டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார்.

மதுரை மாவட்டம், மண்டேலா நகரில் நேற்று என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டம் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்பட்டுச் சென்றபின், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், என்.டி.ஏ. கூட்டணி தலைவர்கள் மதுரையில் உள்ள ஓட்டலில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையில், தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக முதலில் தகவல் வெளியான நிலையில், ஆலோசனை முடிந்து வெளியே வந்த தலைவர்கள் அதனை மறுத்தனர். மேலும், 11ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி திருச்சிக்கு வர இருப்பதாகவும், அதன் பின்னரே என்.டி.ஏ. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று திடீரென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து இன்று இரவு எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் நடைபெற்றுவரும் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா இருவர் மட்டும் தனியாக ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். இந்த ஆலோசனையில், என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட இருப்பதாகவும், மாநிலங்களவை தேர்தலில் யார், யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா சந்திப்புக்கு பிறகு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி, 5ஆம் தேதியோடு மாநிலங்களவை வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. எனவே அதுதொடர்பாகவும் ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது.
.png)





English (US) ·