தமிழக முதல்வராகிறார் விஜய்

22 hours ago 15

8c85abce-3a36-455d-899b-c2a924615655

விசிக ஆதரவு வழங்கியதால் தவெகவின் எம்எல்ஏ ஆதரவு எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. விசிக தலைவர் தொல்.திருமாவளவனை சனிக்கிழமை (மே 9) சந்தித்து ஆதரவுக் கடிதத்தை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பெற்றார். - படம்: விகடன்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது.

தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் புதிய அரசுக்கு வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

“தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம். திமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும். கடந்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அமையவிருக்கும் புதிய அரசு தொடர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாகவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது எக்ஸ் பக்கத்தில் , தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும், ஆட்சியமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறத் தவித்து வந்தது.

ஏற்கெனவே காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளித்திருந்த நிலையில், சனிக்கிழமை மாலை மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே விசிக ஆதரவு தெரிவித்தது. இதன்மூலம் தவெக பெரும்பான்மையை எட்டியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்ததால், தவெகவிற்கு ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. விஜய் ஆட்சியமைப்பதில் நீடித்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

ஐயுஎம்எல் சார்பில் இரு எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதம் செங்கோட்டையன் வசம் அளிக்கப்பட்டது. 

ஐயுஎம்எல் சார்பில் இரு எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதம் செங்கோட்டையன் வசம் அளிக்கப்பட்டது.  -

விஜய் நான்காவது முறையாக சனிக்கிழமை (மே 9) மாலை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் கேரளா செல்ல இருப்பதாக சொல்லப்படுவதால், அவர் நேரம் வழங்குவாரா அல்லது மீண்டும் திருப்பம் ஏற்படுமா என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை விஜய் ஆளுநரைச் சந்தித்து, சனிக்கிழமை பதவியேற்பார் எனப் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், நள்ளிரவில் 118 இடங்கள் எனும் பெரும்பான்மை உறுதி செய்யப்படாததால், ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும் முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்திருப்பதும் இந்திய அரசியலில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள விஜய்க்குப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article