‘மின்னல் வீரன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது கோலிவுட்டில் நடிக்கவேண்டும் என்ற கனவு நனவான தருணம் குறித்து மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார்.
“சிறு வயதிலிருந்தே அம்மாவின் தமிழ்ப் படங்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். ஒரு நாள் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. இன்று அது ‘மின்னல் வீரன்’ மூலம் நனவாகும் போது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன்,” என்று உற்சாகத்துடன் கூறினார் ஜான்வி.
“நான் தமிழ் படத்தில் நடிக்கப் போகிறேன் என்று அறிவிப்பு வந்த நாளிலிருந்தே சமூக வலைத்தளங்களில் தமிழ் ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் அன்பு அளப்பரியது.
“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த அன்புக்கு நான் அடிமையாகிவிட்டேன். இவர்களுடைய அன்புக்காகவே நான் இன்னும் கடுமையாக உழைத்து ஒரு சிறந்த நடிப்பை வழங்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி எனக்குள் அதிகரித்திருக்கிறது.
“என் அம்மா நடந்த இந்தத் திரையுலகப் பாதையில், இன்று நான் நடப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். அவர் விட்டுச் சென்ற பெருமைக்கு சிறிதளவேனும் நியாயம் செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம்,” என்று உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார்.
பேட்டியின் இறுதியில், “சென்னையின் உணவுச் சுவைக்கு அடிமையாகிவிட்டேன். படப்பிடிப்பில் தினமும் எனக்கு காஃபி வேண்டும் என்று கேட்டு வாங்கிவிடுவேன். இட்லி, பொங்கல், சாம்பார் என இங்குள்ள உணவுகள் எனக்கு மிகவும் பிடித்துவிட்டன. நிச்சயம் தமிழ் மொழியை முழுமையாகக் கற்றுக்கொண்டு, என் அடுத்த படத்திற்கு நானே டப்பிங் பேச முயற்சி செய்வேன்,” என்று புன்னகையுடன் சொன்னார்.