தற்காலிகத் தடைக்கான சாத்தியம்: கார்ட்லைஃப் பதிலளிக்க கூடுதல் அவகாசம்

19 hours ago 11

abe69d99-e7f7-49ed-a43d-26339a950e08

கார்ட்லைஃப். - கோப்புப் படம்: ‌ஷின் மின்

தனியார் தொப்புள்கொடி ரத்த வங்கி கார்ட்லைஃப் தற்காலிகமாகத் தடை செய்யப்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அது குறித்து சுகாதார அமைச்சுக்குப் பதிலளிக்க கார்ட்லைஃபுக்குக் கூடுதலாக 14 நாள்கள் வழங்கப்பட்டுள்ளன.

பதிலளிக்கக் கூடுதல் காலம் வேண்டி இம்மாதம் ஆறாம் தேதியன்று சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்ததாக கார்ட்லைஃப் குழுமம் திங்கட்கிழமை (அக்டோபர் 13) தெரிவித்தது. கோரிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) தங்களிடம் தெரியப்படுத்தியதாகவும் கோர்ட்லைஃப் கூறியது.

இதன்படி இம்மாதம் 27ஆம் தேதிக்குள் கார்ட்லைஃப் பதிலளிக்கவேண்டும்.

தற்காலிகத் தடை குறித்து அறிவிக்கப்பட்டதற்கு மறுநாளான கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியிலிருந்து தாங்கள் புதிதாக ரத்தம் பெற்று அதைச் சோதித்துச் சேகரிப்பதை நிறுத்திவிட்டதாகக் குழுமம் குறிப்பிட்டது.

கடந்த ஜூலை மாதம் சுகாதார அமைச்சு சோதனை நடத்தியபோது கார்ட்லைஃபின் செயல்பாடுகளில் பல குறைபாடுகள் இருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து அது தற்காலிகமாகத் தடை செய்யப்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே செயல்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததற்காக 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கார்ட்லைஃபுக்கு ஆறு மாத காலம் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பிறகு கார்ட்லைஃப் அதன் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொண்டதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அது கட்டங்கட்டமாக மீண்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து குழுமத்தின் உரிமம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. எனினும், கடந்த ஜூலையில் நடந்த சோதனையில் மறுபடியும் கார்ட்லைஃபின் செயல்பாடுகளில் குறைகள் கண்டறியப்பட்டன.

Read Entire Article