இந்தியாவில் தேர்தல் களைகட்டத் தொடங்கும்போதெல்லாம் வாரிசு அரசியல் பற்றி ஊடகங்கள் பெரிதாகப் படம் போட்டுக் காண்பிப்பது வழக்கமாகிவிட்டது. இந்த சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளிலும் வாரிசுகள் முகம் காட்டுவதைப் பார்க்கிறோம்.
சுதந்திரம் பெற்றதுமுதல் 2014ல் மோடி சகாப்தம் உருவாகும்வரை, தொடர்ந்தோ இடைவெளிவிட்டோ இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், மோதிலால் நேரு தொடங்கி ஐந்து தலைமுறைகளைக் கண்ட கட்சியாகும். நாட்டில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றங்களின் பின்னணியில் அந்தக் கட்சி உள்ளது.
தமிழ்நாட்டில் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி என்று மூன்று தலைமுறை கண்ட திமுகவில் அன்பில் தர்மலிங்கம், என்விஎன் நடராசன் போன்ற முதுபெரும் தலைவர்களின் மூன்றாம் தலைமுறை வாரிசுகள் இன்னும் களத்தில் உள்ளன. இன்னும் பல திமுக தலைவர்களின் பிள்ளைகள் எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் பதவிகளில் உள்ளனர்.
இந்தியாவில் அதிகக் காலம் முதலமைச்சராக ஆட்சி செய்தவர்கள் பட்டியலில் கலைஞர் கருணாநிதி உள்ளார் (18 ஆண்டு, 11 மாதங்கள்). வாரிசு அரசியல் ஏற்கத்தக்கதல்ல என்றால் காங்கிரசோ திமுகவோ நீண்டகாலம் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்க முடியாது என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் தந்தை செந்தமிழன் காங்கிரஸ்காரர். காங்கிரசின் எல்லா முகங்களையும் அறிந்த சீமான், அந்தக் கட்சியை எதிர்த்துத்தான் அரசியல் களம் கண்டார். இந்தத் தேர்தலில்கூட தாயார் அன்னம்மாளை வேட்புமனுத் தாக்கல் அலுவலகத்திற்கே அழைத்துச் சென்று, அவரது காலில் விழுந்து மனுத்தாக்கல் செய்ததோடு, மாற்று வேட்பாளராகத் தமது மனைவி கயல்விழியைத்தான் மனுவில் குறிப்பிட்டுள்ளார் செந்தமிழன் சீமான்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாகக் கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள மாலதி திருக்குமரன், அக்கட்சித் தலைவர் திருமாவளவனின் மறைந்த சகோதரி பானுமதியின் மகள்தான். தமது அக்காவை அம்மா நிலையில் வைத்துப் போற்றிவந்த திருமாவளவன், அந்தப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாகவே இம்முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
விஜயகாந்திற்கும் மக்களுக்கும் இடையிலான உறவை நீண்டகாலத்திற்குக் கொண்டுசெல்லவே அவரது மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன், மைத்துனர் சுதீஷ் ஆகியோர் அரசியல் களத்தில் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவிலும் வாரிசுகள் உள்ளன. ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் என்று, திமுக அளவுக்கு இல்லாவிட்டாலும் ஆங்காங்கே உள்ளன.
வாரிசு, சொந்த பந்த உறவு என்பதெல்லாம் இந்திய அரசியல் தலைவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவே இருந்து வந்துள்ளன.
வாரிசு அரசியலை எதிர்த்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் பின்னாளில் மகன் அன்புமணியை அரசியலுக்குக் கொண்டு வந்தார்; மத்திய அமைச்சர் ஆக்கினார். ராமதாசின் மகள் காந்திமதியும் அன்புமணியின் மனைவி செளமியாவும் தற்போது அரசியலுக்கு வந்துவிட்டனர்.
மு.க. ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரப்படுவதை எதிர்த்து 1994ல் திமுகவிலிருந்து விலகி மதிமுகவை உருவாக்கினார் வைகோ. முப்பதாண்டுகளுக்குப் பின்னர், 2024 மக்களவைத் தேர்தலில் அதே திமுகவின் ஆதரவுடன் அவரது மகன் துரை வைகோ போட்டியிட்டு எம்பி ஆகிவிட்டார்.
ஆக, வாரிசு அரசியல் தவறல்ல என்பதை, அதனை எதிர்த்தவர்களே பின்பு உணர்ந்தார்கள் என்பதுதான் வரலாறு. - திருநா
.png)


English (US) ·