Last Updated:Dec 21, 2025 11:14 AM IST
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகளுடன் நேற்று மாலை கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில், "மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா, நாளை (22.12.2025) திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகோதர சகோதரிகளுக்கு QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு தனது கட்சியின் நிர்வாகிகளோடு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், மாநில நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து, பட்டியலை சரிபார்க்கும் பணியில் திமுக, அதிமுக ஆகிய கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகளுடன் நேற்று மாலை கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இதில், பொதுச்செயலாளர் ஆனந்த், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் நெருங்கும் சூழலில், பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜயுடன் 3 மணி நேரமாக ஆலோசனை நடத்திய பிறகு நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர்.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
First Published :
Dec 21, 2025 11:12 AM IST
.png)




English (US) ·