தாயார் ரேணுகா சிவானந்தனுடன் (இடது) ஒரே மகளான ஹர்வினி. - படம்: ரேணுகா சிவானந்தன்
24 வயதில் திருமணம் செய்துகொண்ட திருவாட்டி ரேணுகா சிவானந்தனுக்கு, அதிகப் பிள்ளைகள் பெறவேண்டும் என்பது நெடுநாள் கனவு.
இருப்பினும், ஒற்றைப் பெண் பிள்ளையைப் பெற்ற அவர், பிள்ளைமீது முழுப் பாசத்தையும் பொழிந்து அவரை நல்ல விதமாக வளர்க்க உறுதிபூண்டார்.
“நான் 25 வயதாக இருந்தபோது, என் செல்ல மகள் ஹர்வினியைப் பெற்றதில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அவள்தான் என் உலகம் எனத் தீர்மானித்து, இயன்ற அனைத்தையும் அவளுக்கு வழங்கினேன்,” எனப் பாசம் மல்கக் கூறினார் 55 வயது திருவாட்டி ரேணுகா.
1970களில் சுங்கை ரோட் கம்பத்து வீட்டிலும் கிளந்தான் ரோட்டிலுள்ள அடுக்குமாடி வீட்டிலும் வளர்ந்தபோது தாம் கண்ட தாய்மார்களைத் திருவாட்டி ரேணுகா நினைவுகூர்ந்தார்.
“அந்தக் காலத்தில் தாய்மார்கள் உணவைப் பகிர்ந்துண்டு வாழ்ந்தனர். அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள் ஒன்றுகூடிக் கதை கேட்போம், படிப்போம்,” என்றார் அவர்.
“மூத்தப் பிள்ளைகளுக்கு வீட்டு வேலைகளைப் பிரித்துக் கொடுத்து, தலைமைத்துவப் பண்புகளோடு அவர்களை வளர்ப்பது தாய்மார்களின் வழக்கமாக இருந்தது. நானும் என் அண்ணன், தங்கையுடன் அன்பான ஒரு குடும்பத்தில் வளர்ந்தேன். அப்பா வருமானம் ஈட்ட, அம்மா ஒரு மகிழ்ச்சியான இல்லத்தரசியாக எங்களை வழிநடத்தினார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“எனக்கு நிரந்தர வேலை இருந்தபோதிலும், என் மகளுக்குச் சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கப் பகுதிநேர வேலைகளையும் செய்தேன். அச்சூழலில், என் தாயார் ‘இரும்புப் பெண்மணி’ போல என் பிள்ளையைப் பார்த்துக்கொள்ள உறுதுணையாக இருந்தார்.
“அதேபோல், என் மாமியார், நாத்தனார் என அனைவரும் என் மகள்மீது மிகுந்த அன்பு காட்டினர். சில நேரங்களில் நான் எடுக்கும் வகுப்புகளுக்கு என் மகளையும் அழைத்துச் செல்வேன். இன்ப துன்பங்கள் அனைத்திலும் என்னோடு இணைந்து பயணம் செய்த என் மகளுக்குச் சிறந்ததை வழங்க வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோளாக இருந்தது,” எனத் திருவாட்டி ரேணுகா சொன்னார்.
சுழன்றோடிய காலம், தாய்மையைப் பற்றிப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்ததாக அவர் கூறினார்.
“தற்போது என் மகள் ஹர்வினியும் இரு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டாள். இன்று, தன் வாழ்க்கையில் ஏதேனும் சவால்களைச் சந்திக்கும்போது, வழிகாட்டுதலுக்காகவும் மன அமைதிக்காகவும் அவள் என்னைத் தேடி வருகிறாள்,” என அவர் கூறினார்.
பரிவுடன் கலந்த தலைமைத்துவமே தமது தாயாரின் வளர்ப்புமுறை என்று 30 வயது ஹர்வினி ரேணுகா தெரிவித்தார்.
“என் தாயாரின் பராமரிப்பில் என்னால் வெற்றியை நோக்கி முனைப்புடன் செயல்பட முடிந்தது. சமச்சீரான, ஆன்மாவுக்கு உரமூட்டும் முறையில் அம்மா என்னை வளர்த்துள்ளார்,” என்று நிதி ஆலோசகராகப் பணிபுரியும் அவர் கூறினார்.
எல்லாப் பிள்ளைகளுமே பெருமைக்குரியவர்கள்தான் என வாசகர்களுக்குக் கூற விரும்புவதாகத் திருவாட்டி ரேணுகா தெரிவித்தார்.
“கண்டிப்புடன் வளர்த்தாலும் பொறுமையுடன் இருங்கள். பிள்ளைகளுக்குச் சொந்தமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுப்பதுடன், அவர்களுக்கு வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் வழங்குங்கள்,” என்று அவர் கூறினார்.
“முக்கியமாக, உங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவழித்துத் தொடர்பில் இருங்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில், அருகிலேயே இருக்க முடியாவிட்டாலும், உங்கள் அன்பையும் கவனத்தையும் குறுந்தகவல் வழியாவது அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்,” என்றார் திருவாட்டி ரேணுகா.
.png)






English (US) ·