தி.நகர் நடைபாதை முதல் டிரில்லியன் இலக்கு வரை: ஒழுக்கமும் பொருளாதார வளர்ச்சியும்

20 hours ago 15

தியாகராய நகரின் பரபரப்பான நடைபாதைகளில் ஒரு எளிய சுமை வியாபாரியாகத் தொடங்கி, இன்று ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்து நிற்கும் ஒருவரின் "ஜீரோ முதல் ஹீரோ" வரையிலான பயணத்தை இக்கட்டுரை விவரிக்கிறது.

Published:Just NowUpdated:Just Now

சித்தரிப்புப் படம்

சித்தரிப்புப் படம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

Zero (0) :-

          வெறுங்கையுடன் வருபவர்களை தங்கள் கை நிறைய பொருள்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் தியாகராய நகர் சாலையோரத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது கடையின் முதலாளி சில நபர்களுடன் கடைக்குள் வந்தார். அவர்கள் கடையின் வரவு செலவுகளை கணினிமயமாக்குவது குறித்து ஆலோசிக்க தொடங்கினர். வந்தவர்களை உபசரிக்க மிக எளிதில் கிடைக்கக்கூடிய விருந்தோம்பல் முறையான தேனீர் உபசரிப்பு செய்ய முற்பட்டார்.

அவ்வழியாக மிதிவண்டியில் தேனீர் விற்றுக் கொண்டு ஒருவர் வந்தார். அவரிடம் சிறப்பான இஞ்சி தேனீர் இருந்தது. அனைவருக்கும் பரிமாறும் வேளையில் கடையின் முதலாளி தனக்கு வயிற்றுப்புண் இருப்பதால் இஞ்சி வேண்டாம் என்று மறுத்து விட்டார். வந்தவர்களை தேனீர் உபசரிப்புடன் அனுப்பிவிட்டு பின்னர் வயிற்றுப்புண்ணிற்கான காரணத்தை கேட்டோம். அப்போது தன்னுடைய ஜீரோ முதல் ஹீரோ ஆன கதையை சொல்லத் தொடங்கினார்.

 ஒழுக்கமும் பொருளாதார வளர்ச்சியும்

Ten (10) :-

         இதேதியாகராய நகர் சாலையோரத்தில் 20 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய கைகளில் சிறு சிறு பொருட்களை வைத்துக் கொண்டு வியாபாரம்செய்யத் தொடங்கியதாக கூறினார். அந்த சமயத்தில் பத்து ரூபாய் சம்பாதிப்பது மிகவும் கடினம் என்றார். அந்நேரத்தில் சரியான உணவுப் பழக்கம் இல்லாத காரணத்தால் தனக்கு வயிற்றில் புண் ஏற்பட்டதாக கூறினார். தியாகராய நகரின் சாலையோரத்தில் கை சுமை வியாபாரியாக இருந்து தற்போது நிறுவனமாக உயர்ந்ததற்கு காரணமாக இருந்தது தனி மனித ஒழுக்கமே என்று எங்களுக்கு எடுத்துரைத்தார். தான் அனுபவித்த துயரங்களை அவருடைய கடையில் வேலை பார்க்கும் எங்களுக்கு ஏற்படக்கூடாது என்று அறிவுரை கூறினார்.

Hundred (100):-

       முதன்முதலில் அவருடைய கடையில் விற்பனையாளராக தினசரி ஊதியமாக ஐந்நூறு ரூபாய் பெற்றுக் கொள்வேன். அப்போது நான் பேருந்தில் பயணம் செய்வதை அறிந்து ஐம்பது ரூபாய் தனியே பேருந்து செலவிற்காக கொடுப்பார். சம்பளப் பணத்தை பயன்படுத்தாமல் அப்படியே வீட்டில் கொடுக்கும் படி கூறுவார். இந்த வழக்கம் தியாகராய நகர் வியாபாரிகள் பலரிடம் காணப்படுகிறது. தன்னுடன் வியாபாரம் செய்பவர்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்வதை தொழில் தர்மமாக கருதுகின்றனர். இதனால் கடைகளில் உழைப்பவர்கள் கடையின் முன்னேற்றத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது.

 ஒழுக்கமும் பொருளாதார வளர்ச்சியும்

மேலும் எங்களின் பொருளாதாரத்தை உயர்த்த தங்க நகை சிறு சேமிப்பு திட்டத்தை பயன்படுத்த கற்றுக் கொடுத்தார். அவருடைய முன்னேற்றத்தின் ஒவ்வொரு படி நிலையிலும் எங்களையும் கூடவே அழைத்துச் சென்றார். வியாபாரிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் செலவுகளை குறைக்கும் பொருட்டு மலிவான  மற்றும் தரமான பொருட்களை தேடி விற்பனை செய்கின்றனர். மூன்று ஆடைகள் ஐந்நூறு என்று விற்கப்பட்டால் அதில் ஒவ்வொரு துணியும் வெவ்வேறு விலையில் விற்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக விலையை குறைத்து மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் வியாபாரம் செய்து வருகின்றனர். பேரம் பேசுகையில் கூட, அரசின் நியாய விலைக் கடைகளுக்கு அடுத்து எங்களிடம் தான் விலை மலிவு..! என்று கூறும் அளவிற்கு மக்களின் நலனில் அக்கறை காட்டுகின்றனர்.

Thousand (1000):-

           தியாகராய நகர் சாலையோர கடைகள் ஏழைகள் பொருளீட்டுவதற்கு மட்டுமல்லாமல் செலவு செய்வதற்கும் ஏதுவாக உள்ளது. மாத சம்பளம் வாங்கும் மக்களுக்கு மாத இறுதி நாட்களில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தியாகராய நகரையே நாடி வருகின்றனர். தங்கள் செலவுகளை குறைந்த விலையில் வாங்குவதற்கு உகந்த இடமாக தியாகராய நகர் திகழ்கிறது. இந்த நெருக்கடியானது மாதம் சில ஆயிரங்களில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளையும் பாதிக்கிறது. இவ்வாறு இரு வேறு நபர்களின் வரவு செலவுகள் ஒவ்வொரு மாத இறுதி நாட்களிலும்  ஒரே நேர்கோட்டில் அமைகிறது. இதன் மூலம் ஒருவருடைய பொருளாதாரம் மற்றொருவரை சார்ந்துள்ளதை காண முடிகிறது.

 ஒழுக்கமும் பொருளாதார வளர்ச்சியும்

Million (1000000):-

      மாதம் இலட்சங்களில் சம்பாதிப்பவர்கள் தங்களின் செலவு போக மீதமுள்ளதற்கு வரி செலுத்துவதன் அடிப்படை இதுதான். தனக்குப் போக தானமும் தர்மமும் என்று பழமொழி உண்டு. இதனை அறிவியல் பூர்வமாக சிந்திப்பவர்கள் தாராளமாக தங்கள் பொருளாதாரத்தை வழங்கி அதன் பயனை அனுபவிக்கின்றனர். இந்த கொள்கையை சில கெட்டிக்காரர்கள் தவறாக புரிந்து கொண்டு தங்கள் வரிப் பணத்தை விடுவிக்க தயங்குகின்றனர்.

பொருளாதாரம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பதை தவறென்று இன்றைய உலகம் மெதுவாக உணரத் தொடங்கி விட்டது. கருப்புப் பணம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பரவி வருகிறது. விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் போன்ற பொருளாதார விவகாரங்கள் மக்களுக்கு புரியத் தொடங்கி விட்டது. ஆயிரங்களில் வருமானம் ஈட்டும் மக்கள் சந்தித்து வந்த நெருக்கடியை தற்போது இலட்சங்களில் சம்பாதிப்பவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். நாம் செய்த ஊழல் நம்மையே பாதிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ள நிர்வாக யதார்த்தத்தை வருங்காலங்களில் அறிந்து கொள்வார்கள் என நம்பலாம்.

Billion (1000000000):-

              உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் பல கோடி மகளிர் மாதந்தோறும் பெறும் மகளிர் உரிமைத் தொகை  திட்டம் குறித்து பேசலாம். இந்த திட்டத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் இத்திட்டத்தினை மறுக்கின்றனர். பணத்தை கொடுப்பதால் குறைந்து விடும் என்று பணத்தை பொருளாக பார்ப்பவர்கள்  கருதுகின்றனர். பணத்தை சரியாக  முறைபடுத்திப் பார்த்தால்  செல்வம் என்கிற மற்றொரு பெயர் புலப்படும். நமக்கு கிடைத்த செல்வத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் குறைந்து போகாது.

தற்போது மகளிர் உரிமைத் தொகையாக பெறப்படும் செல்வமானது அரசின் மூலம் நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரித்து மக்களின் சுமை சற்று குறைவதை காண முடிகிறது. இப்பணம் ஆயிரங்களில் மாத வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு மாத இறுதி நாட்களில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க பேருதவியாக இருப்பதை சாலையோர வியாபாரியாக உணர முடிகிறது. மாத இறுதி நாட்களிலும் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வரவு செலவு குறித்த அச்சம் சற்று நீங்கி விட்டது. வரவும் செலவும் போக சேமிப்பு மற்றும் முதலீடு நோக்கி மக்கள் நகரத் தொடங்கிவிட்டனர். 

 ஒழுக்கமும் பொருளாதார வளர்ச்சியும்

Trillion (1,000,000,000,000):-

                                    இன்றைய அரசுகள் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  பொருளாதார ரீதியாக  மக்களின் சுமைகளை குறைக்கும் போது மேம்பட்ட நாட்டை உருவாக்க மக்களால் முழுவீச்சில் செயல்பட முடிகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடையின் முதலாளி முதல் முதல்வர் வரை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதை காண முடிகிறது.

எனவே நம் முதல்வர் அறிவித்த  1 டிரில்லியன் பொருளாதாரம் என்ற  வெற்றி இலக்கை தமதாக்கி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். முன்பு என் கடையின் முதலாளி சொன்னது போல் ஜீரோ முதல் ஹீரோ  ஆவதற்கும் நம் முதல்வர் அறிவித்த நம் அனைவரின் இலக்கான 0 இலக்கத்தில் இருந்து 1,000,000,000,000 வரை செல்ல நமக்கு உதவக்கூடிய செல்வம்  தனி மனித ஒழுக்கமே ஆகும். பெரிதினும் பெரிது கேள் என்ற கூற்றின் படி முதல்வர் அறிவித்த இலக்கானது உத்வேகமுள்ள இளைஞர்கள் தவறான வழிகளில், வழி தவறிச் செல்லாமல் இலக்கை நோக்கிச் செல்ல வழிவகுக்கும். 

                                                                                           - சுபி தாஸ் 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

My vikatanMy vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read Entire Article