தமிழ்நாடு தேர்தல் களம் அனல் பறக்கத் தயாராகி வரும் சூழலில், வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என அரசியல் கட்சிகள் பரபரப்பாக பணியாற்றி வருகின்றன.
அதிலும், பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஏறக்குறைய கூட்டணியை இறுதி செய்துவிட்டன. மீதமிருக்கும் சிறு கட்சிகளும் வரவிருக்கும் நாட்களில் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசோ, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக காத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ், விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டுமென திமுகவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
ஆனால், கூட்டணியில் மேலும் சில கட்சிகளைச் சேர்ப்பதிலேயே கவனம் செலுத்திவந்த திமுக, பேச்சுவார்த்தை குழு அமைப்பதில் காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதன்படி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் முதல் கட்சியாக, இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
அதேநேரம், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள சூழலில், தோழமை கட்சிகள் கேட்கும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வருமா என்பது வரும் காலங்களில் தெரியவரும்....
.png)






English (US) ·