மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தை தவற விட்டதற்கு மிகவும் வருத்தப்பட்டேன் என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் அக்டோபர் 17-ம் தேதி திரைக்கு வரவுள்ள 'பைசன்' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர் பா.ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேசுகையில், "முதலில் சில வருடங்களுக்கு முன்பு பா. ரஞ்சித் தரப்பிலிருந்து பரியேறும் பெருமாள் படத்திற்காக எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் கால் சீட் பிரச்சினை காரணமாக என்னால் அந்த படத்தை பண்ண முடியாமல் போனது. அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன்.
பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த பிறகு நான் மிகப்பெரிய மாரி செல்வராஜ் ரசிகராக மாறிவிட்டேன். எனது தந்தை மாரி செல்வராஜ்க்கு மிகத் தீவிர ரசிகர். பரியேறும் பெருமாள் படத்தையே 13 தடவைக்கு மேல் பார்த்திருப்பார். அதன் பிறகு அவருடைய ஒவ்வொரு படத்தின் அப்டேட் எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டே இருப்பேன். பிரேமம் படம் சமயத்தில் நடந்த ஒரு அற்புதம் எனக்கு பைசன் படத்தில் நடந்தது. இயக்குனர் மாரி செல்வராஜ் சினிமாவில் நடிப்பு மற்றும் சினிமாவை பற்றி வேறு ஒரு பரிமாணத்தை எனக்கு காண்பித்தார். இதற்குப் பிறகு பைசனுக்கு முன் அனுபமா, பைசனுக்கு பிறகு அனுபமா என என்னை பார்ப்பீர்கள்." என்றார்.
நடிகை ரெஜிஷா விஜயன் பேசுகையில், "கர்ணன் படத்திற்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் உடைய அடுத்த படங்களிலும் எனக்கு வாய்ப்பு கேட்டேன். ஆனால் உனக்கான கதை எழுதவில்லை என்று கூறிவிட்டார். கர்ணன் படத்தில் நீச்சல் கத்துக்கொண்டேன். ஆனால் நாலு வருடங்கள் ஆனதால் அது மறந்துவிட்டது. கொஞ்சமாக இருந்த போதிலும் பைசன் படத்தில் நீச்சல் காட்சி இருந்தது. நீச்சல் மறந்ததால் நான் தண்ணீர் உள்ளே சென்று விட்டேன்.
நான் இறந்துவிட்டேன் என்று ஒரு நிமிடம் நினைத்து விட்டேன். பிறகு வெளியே வந்து பார்க்கும் பொழுது இயக்குனர் மாரி செல்வராஜ் போட்டிருந்த கூலிங் கிளாஸ் மற்றும் ஷூவுடன் எனக்காக குதித்திருக்கிறார். நான் ஒரு முப்பது படங்கள் பண்ணி விட்டேன். ஆனால் ரொம்ப பிடித்த இயக்குநர் மாரி செல்வராஜ். நடிகை அனுபமா பரமேஸ்வரன் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் என மூன்று மொழிகளிலும் படம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்திற்கு ஹீரோயின் அவர்தான் இருந்தாலும் எல்லா ப்ரமோஷன் நிலையும் என்னையும் அமர வைத்தார். அனுபமாவிற்கு எந்த ஒரு ஈகோவும் இல்லை. படத்தில் நாங்கள் நல்ல நண்பர்கள், நிஜத்திலும் நாங்கள் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். துருவ் விக்ரம் இந்த படத்தில் கடின உழைப்பை போட்டு இருக்கிறார். இந்த படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவிற்கு நல்ல நடிக்கக்கூடிய ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்து விடுவார்" என பேசினார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், "இந்த பைசன் திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தது மானத்தி கணேசன் தான். என்னுடைய ஹீரோவாக இருந்த இவரை தான் சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்தேன். கபடி விளையாட்டுக்காக, இவருக்காக சிறுவயதில் நான் போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். அவரின் கதையை வைத்து படம் எடுக்கப்போகிறேன் என அனுமதி கேட்டதும், என்னை நம்பி எனக்கு ஒத்துழைப்பை கொடுத்தார் கணேசன்.
நேர்மையான உழைப்புடன் பல போராட்டங்களை தாண்டி முன்னேறி வந்த இளைஞர்களின் கதையை எனது அரசியல் பார்வையில் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இப்போது நான் திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும் என்றால் எனது மனதில் ஒரு பாரம் வரும். நண்பர்களுடன் பேசும்போது அங்கிருந்து வரும் செய்திகள் பதற்றத்தை தருகிறது. இதனை மாற்ற வேண்டும் என்றும், கருத்துரையாடலை முன்னெடுக்க வேண்டும் என்றும் விரும்பி திருநெல்வேலியில் நிகழும் சூழலை இப்பொழுது உள்ள இளைஞர்களிடம் கடத்த இந்த கதையை எழுதியிருக்கிறேன்.
தென் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மற்றும் வெற்றி பெற முடியாத இளைஞர்களின் கதை. சினிமாவில் நான் பெற்ற வெற்றிக்குப் பிறகு என் ஊருக்காகவும், என் மாவட்ட, தென் தமிழகத்துக்காக நான் எடுத்திருக்கும் கதை. எனது உச்சபட்ச எமோஷ்னலும் கர்வமும் இந்தப் படம் தான். தமிழ் மக்கள் இத்திரைப்படத்தை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், என்ன கலந்துரையாடுகிறார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
First Published :
October 13, 2025 2:07 PM IST