தெம்பனிசில் கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமனம்

5 hours ago 9

822e9858-e7c4-4fea-89dc-ee5ea385d4c9

பெரிய அறைகலன்கள், குப்பைகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாகக் குடியிருப்பாளர்கள் புகார் கூறியுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிசில் புதிய துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூய்மைப் பணியில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து புதிய பணியாளர்களை நகர மன்றம் வேலைக்கு அமர்த்தியிருக்கிறது.

புதிய ஒப்பந்ததாரர், சில இடங்களைத் தூய்மையாக வைத்திருக்கத் தவறியதால் மன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பான் சுவான் டிரேடிங் அண்ட் இன்ஜினியரிங் என்ற அந்த நிறுவனம், ஊழியர் பற்றாக்குறையால் திணறியது.

அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை (மே 8) நகர மன்றத்தின் தலைவரான பே யாம் கெங் தெரிவித்தார்.

திரு பே, கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் போக்குவரத்துத் துணை அமைச்சராகவும் இருக்கிறார்.

ஏப்ரல் முதல் தேதி தெம்பனிஸ் குழுத் தொகுதியில் உள்ள ஐந்து பகுதியில் மூன்றைத் தூய்மையாக்கும் ஒப்பந்தத்தை பான் சுவான் நிறுவனம் ஏற்றிருந்தது. தெம்பனிஸ் பொலிவார்ட், தெம்பனிஸ் சென்ட்ரல், தெம்பனிஸ் நார்த் ஆகியன அவை.

ஆனால் குப்பைத் தொட்டிகளையும் பெரிய பொருள்களையும் அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாகக் குடியிருப்பாளர்களிடமிருந்து பல புகார்கள் வந்தன.

தெம்பனிஸ் பொலிவார்டில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் ஒருவரான பி. ராம் நங்கினா, 63, அட்டைப் பெட்டிகளும் சிறிய அறைகலன்களும் அஞ்சல் பெட்டிகளுக்கு அருகே போடப்பட்டிருந்ததாகக் கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் பல நேரங்களில் இதைப் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதே பகுதியில் வசிக்கும் லேனா செங்கும், 48, புளோக்கின் வெற்றுத் தளத்தின் தரையில் பல வேளைகளில் குளிர்பானக் கலன்கள் இருந்ததைக் கண்டதாகக் கூறினார்.

“தூய்மையாளர்கள் தங்களுடைய பணியைச் செய்வதாக நினைக்கிறேன். அங்குள்ளவர்கள்தான் குப்பையைத் தரையில் வீசுகிறார்கள்,” என்று இல்லத்தரசியான அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட டிக்டாக் பதிவு ஒன்று, அந்த வட்டாரத்தில் உள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிவதையும் தரையில் போத்தல், கலன், அட்டைப் பெட்டிகள் சிதறிக் கிடப்பதையும் காட்டியது.

ஆனால் மே 5ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அங்குச் சென்றபோது குப்பைகள் அகற்றப்பட்டிருந்தன. அங்கு இருந்த ஊழியர் ஒருவர், தான் கடந்த வாரம் பணியில் அமர்த்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

Read Entire Article