தேநீர் விருந்தில் கலகலத்த அரசியல் தலைவர்கள்; அசாமில் புதிய முனையத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

2 hours ago 14

99a1f79f-f221-4f2e-bec8-992b114a63c5

தேநீர் விருந்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் காங்கிரஸ் எம்பி பிரியங்கா கலந்துரையாடினர். - படம்: விகடன்

புதுடெல்லி: நாடாளுமன்ற அரசியல், மாநில வளர்ச்சிப் பணிகள் என இரு வேறு நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பாரம்பரியமாக அளிக்கப்படும் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சபையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இந்த விருந்து நிகழ்வு தலைவர்களுக்கிடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையேயான உரையாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தனது தொகுதி மக்களுக்காகத் தான் மலையாளம் கற்று வருவதாக பிரியங்கா காந்தி பிரதமரிடம் தெரிவித்தார்.

பிரதமரின் அண்மைய ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணம் குறித்து பிரியங்கா காந்தி கேட்டறிந்தபோது, எத்தியோப்பியாவின் சமூக, பொருளாதார முன்னேற்றம் குறித்துப் பிரதமர் வியப்புடன் பகிர்ந்து கொண்டார்.

கூட்டத்தொடர் குறுகிய காலத்தில் முடிந்தது குறித்துப் பேசப்பட்டபோது, “சபையில் நான் அதிகம் கத்த வேண்டிய அவசியம் ஏற்படாததால், இந்தக் குறுகிய தொடர் என் தொண்டைக்கு மிகவும் நல்லது,” என்று பிரதமர் நகைச்சுவையாகக் கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.

கூட்டத் தொடரைத் தொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் பர்தலோய் அனைத்துலக விமான நிலையத்தில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட முனையக் கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய பிரதமர், “அசாம், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கான புதிய நுழைவுவாயிலாக உருவெடுத்து வருகின்றன. முன்னேற்றத்திற்கான ஒளி மக்களைச் சென்றடையும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையும் புதிய உச்சங்களைத் தொடும்,” என்றார்.

வடகிழக்கு மாநிலத் தாய்மார்கள், சகோதரிகளின் அன்பு தன் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த மக்களுடனான ஆழ்ந்த பிணைப்பே இப்பகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்குத் தனக்கு உந்துதலைத் தருவதாகத் தெரிவித்தார்.

அரசியல் களத்தில் தலைவர்கள் காட்டும் பரஸ்பர மரியாதையும், நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை நோக்கிய முன்னெடுப்புகளும் அரங்கேறியுள்ளன.

Read Entire Article