தமிழ்ச் சினிமாவில், நடிகர்கள் தங்களின் படங்களைத் தாங்களே தயாரிப்பது என்பது எம்ஜிஆர், சிவாஜி காலம் தொட்டே இருந்து வரும் வழக்கம்.
ஆனால், ஒரு நடிகர் மற்றொரு நடிகரின் படத்தைத் தயாரிப்பது என்ற ஆரோக்கியமான கலாசாரத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன்.
1987ல் சத்யராஜ் நடித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தைத் தயாரித்ததன் மூலம், அவர் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த வழக்கம் இன்று ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் தொடங்கி மலையாளத்தில் துல்கர் சல்மான், ஃபகத் ஃபாசில், தெலுங்கில் நானி வரை பல முன்னணி நாயகர்கள், நல்ல கதைகளாகத் தேடி மற்ற நடிகர்களை வைத்து படங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2014ல் தனது தம்பியை நாயகனாக்கி ‘அமர காவியம்’ படத்தை ஆர்யா தயாரித்தார். தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் ‘ஜீவா’ படத்தைத் தயாரித்தார். மலையாளத்தில் ‘ரெண்டகம்’, அண்மையில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உள்ளிட்ட படங்களில் தான் நடிக்காமல் தன் நண்பர்கள் அல்லது உறவினர்களை வைத்து ஆர்யா படம் தயாரித்திருக்கிறார்.
“ஒரு கதை நம்முடைய தயாரிப்பாக வெளிவரும்போது ஒரு கலைஞனாக பெரும் மனநிறைவு கிடைக்கிறது,” என்கிறார் சிவகார்த்திகேயன். அவர் தயாரித்த ‘கனா’, ‘வாழ்’ ‘கொட்டுக்காளி’ போன்ற படங்கள், அவரால் நடிக்க முடியாமல் போனாலும், அவரது தயாரிப்பில் உயிர்பெற்ற சிறந்த படைப்புகள்.
இந்தப் பட்டியலில், தனுஷ் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
“நான் கஷ்டப்பட்ட காலத்தில் பலர் எனக்கு உதவினார்கள். இப்போது நான் மற்றவர்களுக்கு உதவுகிறேன்,” என்று எளிமையாகச் சொல்லும் அவர், சிவகார்த்திகேயனை ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ மூலம் பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது தனுஷின் தயாரிப்புதான்.
விஜய் சேதுபதிக்கு ‘நானும் ரவுடிதான்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ போன்ற படங்களைத் தயாரித்து, தேசிய அளவில் கவனம் ஈர்த்தார்.
அதேபோல், தன் மனைவி ஜோதிகாவின் மறுபிரவேசத்திற்காக ‘36 வயதினிலே’ தொடங்கி பல படங்களைத் தயாரித்ததுடன், ‘உறியடி 2’ போன்ற சமூக அக்கறையுள்ள படங்களையும் தயாரித்து வருகிறார்.
மலையாளத்தில், ஃபகத் ஃபாசில் ‘கும்பலாங்கி நைட்ஸ்’, ‘பிரேமலு’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். துல்கர் சல்மான் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய இயக்குநர்களுக்கும், கதைகளுக்கும் மேடை அமைத்துக் கொடுக்கிறார்.
முத்திரை பதிக்கும் நாயகிகள்
இந்த மாற்றம் கதாநாயகர்களுடன் நின்றுவிடவில்லை. கதாநாயகிகளும் தயாரிப்பில் தங்களின் முத்திரையைப் பதித்து வருகிறார்கள்.
நயன்தாரா தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் இந்தியாவின் ஆஸ்கர் நுழைவுப் படமான ‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்து தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.
ஐஸ்வர்யா லட்சுமி தயாரிப்பில், சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ திரைப்படம், விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
திரையின் நாயகி, நாயகர்கள் இப்போது திரைக்குப் பின்னாலும் ஆளுமைகளாக உயர்ந்து, நல்ல சினிமாவுக்கான புதிய வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறார்கள்.