நீட் வினாத்தாள் கசிவு: NTA உறுப்பினர்களுக்கு நேரடி தொடர்பு? அனைத்து அதிகாரிகளையும் விசாரிக்க சிபிஐ திட்டம்

1 hour ago 10

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 23 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தேர்வுக்கு முன்பே நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களை சேர்ந்த 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மூளையாக செயல்பட்ட மகாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியை மனிஷா மந்தாரேவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லியில் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

புனேவில் உள்ள மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் மந்தாரே, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக கேள்வித்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன்மூலம் உயிரியல் மற்றும் தாவரவியல் வினாத்தாளை முழுமையாக அணுகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. கடந்த மாதம் புனேவில் உள்ள தனது இல்லத்தில் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்பின்போது, ​அவர் உயிரியல் மற்றும் தாவரவியல் வினாத்தாளை கசியவிட்டதாகவும், இதற்காக மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும் சிபிஐ அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கில் புனேவைச் சேர்ந்த வேதியியல் விரிவுரையாளரும், தேசிய தேர்வு முகமையின் வினாத்தாள் தயாரிப்புக் குழு உறுப்பினருமான குல்கர்னி என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மந்தாரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கான தேர்வர்களை அழகு நிலைய உரிமையாளர் மனிஷா வாக்மரே என்பவர் உதவியுடன் மந்தாரே திரட்டியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. மனிஷா வாக்மரே கடந்த 14-ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

மந்தாரேவும், மனிஷா வாக்மரேவும் புனேவில் உள்ள கங்கா ஓசியன் பார்க் சொசைட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், அங்குள்ள மந்தாரேவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முதல் முறையாக தேசிய தேர்வு முகமை உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தேசிய தேர்வு முகமையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிஐ திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் குல்கர்னி, மனிஷா வாக்மரே ஆகியோரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தது. அதனடிப்படையில் குல்கர்னி, மனிஷா வாக்மரேவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article