நீ சூன் குழுத் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜாக்சன் லாம், கோ ஹன்யான், சையட் ஹருண், லீ ஹூய் யிங் ஆகியோருடன் நடுவில் அமைச்சர் கா. சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
நீ சூன் குழுத் தொகுதியில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு எம்பிக்களுக்கு அத்தொகுதியின் முதன்மை அமைச்சரான திரு சண்முகம் முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.
“நிதானமாகச் செயல்படுங்கள். அதே சமயத்தில் அவசரமான காரியம், முக்கியமான காரியம் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளைப் புரிந்து செயல்படுங்கள்,” என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் ஒன்பதாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு சண்முகம் அத்தொகுதி எம்பிக்களுக்கு மின்னஞ்சல் எழுதியிருக்கிறார்.
இரண்டு இளம் எம்பிக்கள் இரவு நேரத்திலும் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதைக் கவனித்த அவர், அவ்வாறு செயல்படுவது நீண்டகாலத்திற்கு ஏற்றதல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது ஒரு மராத்தான் ஓட்டம் போன்றது,” என்று 2025 மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாக்சன் லாம், லீ ஹூய் யிங், டாக்டர் சையட் ஹருண், கோ ஹன்யான் ஆகியோரிடம் திரு சண்முகம் தெரிவித்தார்.
நான்கு உறுப்பினர்களும் திரு சண்முகத்தை ஒரு தந்தையாகப் பார்க்கின்றனர்.
புதிய எம்பிக்கள் இரவு நேரங்களில் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதை இதற்கு முன்பும் திரு சண்முகம் கவனித்துள்ளார்.
மே 7ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு நீ சூன் நாடாளுமன்றக் குழு பேட்டியளித்தது.
அப்போது, ஒவ்வொரு நாளும் விடியற்காலை ஒரு மணி அல்லது இரண்டு மணியளவில் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதில் உள்ள பிரச்சினைகளை திரு சண்முகம் எடுத்துரைத்தார்.
“ரோம் ஒரே நாளில் கட்டப்படவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மக்களை அறிந்துகொள்ள வேண்டும், தொகுதிப் பிரச்சினைகளுக்குப் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் பதிலளித்துக் கொண்டிருந்தால் விரைவில் சோர்வடைந்து விடுவோம்.
“அப்படி சோர்வடைவதால் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்பம் அல்லது தொகுதிக்கும் பயனில்லாமல் போய்விட நேரிடும்,” என்றார் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம்.
“என்னுடைய சொந்த மதிப்பீட்டின்படி சீரான வேகத்தில் செயல்படுவது சிறந்தது. நீங்கள் செய்யும் வெவ்வேறு பணிகளை மனதில்கொண்டு செயல்பட வேண்டும். அவசரமானதற்கும் முக்கியமானதற்கும் இடையே வேறுபாடு உள்ளது.
“சில சமயங்களில் அவசரமான வேலைகளை உடனடியாக முடிக்க வேண்டியிருக்கும். சில வேளைகளில் முக்கிய விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்,” என்று அவர் விளக்கினார்.
சிங்கப்பூரில் நீ சூன் குழுத் தொகுதியில் மட்டும்தான் அனைவரும் புதிய முகங்களாக அமைச்சர் சண்முகத்துடன் களமிறக்கப்பட்டனர். மக்கள் செயல்கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 32 புதிய முகங்களை வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தியது. அவர்களில் இவர்கள் நால்வரும் அடங்குவர்.
.png)





English (US) ·