பெங்களூரு: ஜூன் 18-
ஐடி காரிடார் பகுதியான பெள்ளந்தூரில் உள்ள ஒரு பிரபல ‘கோ-லிவிங்’ பெண்கள் பிஜியில் (தங்கும் விடுதி) இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அந்த பிஜியில் தங்கியிருக்கும் பெண் ஒருவர், கடந்த 14-ம் தேதி மாலை 4:30 மணியளவில் குளியலறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஏர்-வென்ட் எனப்படும் காற்றுச்சாளரத்தின் உள்ளே ஏதோ ஒரு வெள்ளை நிறப் பொருள் இருப்பதைப்பார்த்து அதிர்ந்தார். உற்று நோக்கியபோது, அது ஒரு ஐபோன் என்பது தெரியவந்தது! யாரோ தங்களை ரகசியமாகப் படம் பிடிக்கிறார்கள் என்பதை உணர்ந்த அந்தப் பெண், சாதுரியமாகச் செயல்பட்டு உடனடியாக விடுதி காப்பாளரிடம் புகாரளித்தார்.
விடுதி காப்பாளர் உடனடியாக அந்தப் பெண்ணின் அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார். முதலில் “எனக்கு எதுவுமே தெரியாது” என்று அந்த வாலிபர் நாடகமாடி மறுத்துள்ளார். ஆனால், விடுதி நிர்வாகம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், “ஆமாம், நான்தான் போனை வைத்தேன்” என்று குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
இதையடுத்து பெள்ளந்தூர் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அந்த காமுகனைப் போலீசார் காவல் நிலையத்திற்கு அள்ளிச் சென்றனர். அவனது மொபைல் போனைச் சோதித்தபோது, அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோக்கள் எதுவும் இல்லை. போலீசாரைப் பார்த்ததும் அவன் வீடியோக்களை ‘டெலிட்’ செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவனது ஐபோன் தற்போது தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.