1986ஆம் ஆண்டு மிகவும் அபாரமாக விளையாடி அர்ஜென்டினாவுக்கு உலகக் கிண்ணத்தை வென்றுதந்தார் டியேகோ மரடோனா. - படம்: ஏஎஃப்பி
சான் இசிடிரோ: அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் டியேகோ மரடோனாவின் மரணம் குறித்த புதிய நீதிமன்ற விசாரணை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) தொடங்குகிறது.
இவ்வழக்கில் முன்னதாக நீதிபதி சர்ச்சையில் சிக்கிக்கொண்டதையடுத்து முதல் நீதிமன்ற விசாரணை முடங்கிப்போனது. அதற்கு ஓராண்டு காலம் கழித்துப் புதிய நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது.
உலகக் காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறந்த விளையாட்டாளர்களில் ஒருவராகக் கருதப்படும் மரடோனா, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்தார். மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு வீட்டில் குணமடைந்துகொண்டிருந்தபோது அவர் உயிரிழந்தார்.
இதயச் செயலிழப்பு, ‘எக்கியூட் பல்மனரி எடீமா’ எனப்படும் நுரையீரல்களில் அதிக திரவம் சேரும் பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக சிகிச்சைக்கு இருண்டு வாரங்கள் கழித்து அவர் உயிரிழந்தார்.
அர்ஜென்டினா தலைநகர் பியுனோஸ் ஆய்ரஸ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள டிக்ரே எனும் குடியிருப்பு வட்டாரத்தில் மரடோனா குணமடைவதற்கான சூழல் தொடர்பில் அவரைக் கவனித்துக்கொண்ட மருத்துவக் குழுவினர் தவறு இழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அக்குழுவில் எழுவர் இருந்தனர்.
அக்குழு பெரிய அளவில் கவனக்குறைவுடன் நடந்துகொண்டதாக அரசாங்க வழக்கறிஞர்கள் வகைப்படுத்தினர். எனினும், முதல் வழக்கு விசாரணை தொடங்கி இரண்டரை மாதங்களில் அது நின்றுபோனது.
புதிய வழக்கு விசாரணையில் சுமார் 120 பேர் வாக்குமூலம் தருவர். மரடோனாவின் மரணத்துக்கு அவரின் மருத்துவக் குழுதான் காரணமா என்பதை உறுதிசெய்வது இந்த நீதிமன்ற விசாரணையின் நோக்கமாகும்.
.png)







English (US) ·