மே 17, 24ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பகிர்வுகளின்போது, நீண்டகால அதிகாரப் பத்திரம் குறித்துப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். அதன் அம்சங்கள், நன்மைகள், விண்ணப்பம் செய்யும் முறை போன்றவற்றைத் தொண்டூழியர்களாகச் சேவையாற்றும் மருத்துவர்களும் வழக்கறிஞர்களும் விளக்குவர். - படம்: சாவ்பாவ்
வருங்காலத்திற்காகத் திட்டமிடுதல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், நீண்டகால அதிகாரப் பத்திரம் (LPA) பற்றிய விழிப்புணர்வு சிங்கப்பூரர்களிடையே குறைவாகவே உள்ளது.
ஒருவர் சிந்திக்கும் ஆற்றலை இழந்தால், அவரது இடத்தில் இருந்து முக்கிய முடிவுகளை எடுக்க வேறொருவருக்கு அதிகாரம் கொடுக்கும் ஆவணம்தான் நீடித்த அதிகாரப் பத்திரம்.
மொழிச் சிக்கல், சட்டம் தொடர்பான வளங்கள் குறைவாக இருப்பது, சட்ட ரீதியான செயல்முறைகள் பற்றிய அறியாமை உள்ளிட்ட பல சவால்களால் இந்தியச் சமூகத்தினர் அந்தப் பத்திரத்தைப் பற்றி புரிந்துகொள்வதும் விண்ணப்பிப்பதும் கடினமாகிறது.
ஒருவர் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும்வரையே, நீடித்த அதிகாரப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பது பலர் அறியாத ஒன்றாக இருக்கலாம்.
அந்நிலையை மாற்ற, முனீஸ்வரன் சமூகச் சேவை அமைப்பும் காமன்வெல்த் டிரைவில் உள்ள ஶ்ரீ முனீஸ்வரன் ஆலயமும் இணைந்து அப்பத்திரத்தைப் பற்றிய இரண்டு பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன.
நீண்டகால அதிகாரப் பத்திரத்தின் முக்கிய அம்சங்கள், அதன் அவசியம், அதன் நன்மைகள் போன்றவற்றை வரும் ஞாயிற்றுகிழமை (மே 17) நடைபெறவுள்ள பகிர்வின்போது வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் மக்களிடம் பகிரவுள்ளனர்.
முதல் பகிர்வு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, அடுத்த ஞாயிற்றுகிழமை (மே 24) இரண்டாம் பகிர்வு இடம்பெறும். அதில் கலந்துகொள்வோர், நீண்டகால அதிகாரப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் முறையைக் கற்றுக்கொள்வர்.
அதோடு, ஒருவரின் சார்பில் முடிவுகளை எடுக்க, நம்பகத்தன்மையுள்ள வேறொருவரை நியமிப்பது எப்படி என்றும் அவர்கள் கற்றுக்கொள்வர். அந்தப் பகிர்வின்போதே, அவர்களால் அப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியம்.
பொதுக் காப்பாளர் அலுவலகத்தின் இயங்குதளத்தில் நீண்டகால அதிகாரப் பத்திரத்திற்குப் பதிவுசெய்ய விரும்புவோர் 21 வயது நிரம்பியவர்களாக இருக்கவேண்டும்.
2024ல் திட்டம் தொடங்கியதிலிருந்து, முனீஸ்வரன் சமூகச் சேவை அமைப்பு 500க்கும் மேற்பட்டோருக்கு நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பெறுவது எப்படி என்று வழிகாட்டியுள்ளது.
ஶ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தின் அனெக்ஸ் கட்டடத்தில் நிகழவுள்ள பகிர்வு நிகழ்ச்சிகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் நடத்தப்படவுள்ளன.
இரண்டு பகிர்வுகளும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
பகிர்வுகளுக்கு அனுமதி இலவசம். இது குறித்த மேல் விவரங்களுக்கும் பதிவு செய்வதற்கும் forms.gle/2s8bmMFi6mj4Fjsy9 எனும் இணையத்தளத்தை நாடலாம்.
.png)






English (US) ·