“மொழியை மதிக்காத ஆட்சி, மக்களின் மனதை மதிக்காத ஆட்சி..” – தவெக அரசுக்கு வேல்முருகன் கண்டனம்

1 hour ago 14

Last Updated:May 10, 2026 3:08 PM IST

"மொழியை மதிக்காத ஆட்சி, மக்களின் மனதை மதிக்காத ஆட்சியாகவே பார்க்கப்படும்” என தவாக தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News18
News18

“அரசு நிகழ்வுகளில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் கோரிக்கையல்ல. அது தமிழர் இனத்தின் அடிப்படை உணர்வும் உரிமையும் ஆகும். மொழியை மதிக்காத ஆட்சி, மக்களின் மனதை மதிக்காத ஆட்சியாகவே பார்க்கப்படும்” என தவாக தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஆளுநர், விஜய்க்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில், வந்தே மாதரம் பாடல் முதலிலும், அதனைத் தொடர்ந்து தேசியக் கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது தற்போது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் புதிய பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழர் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல், பண்பாட்டு மற்றும் அரசு மரபுகளில், எந்த அரசு விழாவாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதே பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் உயரிய நடைமுறையாகும்.

ஆனால், இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், இந்தப் பாரம்பரிய மரபு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: 'வந்தேமாதரம்' பாடலுக்கு முதலிடம்... தவறுக்கு காரணமானவர்கள் யார்? - இந்திய கம்யூ. கேள்வி

உலகின் தொன்மையான மொழி, மனிதகுலத்தின் முதன்மொழி, பல்வேறு தேசிய இனங்களின் தாய் மொழிகளுக்கெல்லாம் தாயானமொழி, ஆயிரமாயிரமாண்டு நாகரிகத்தின் அடையாளமான நமது தாய்மொழி தமிழுக்கு உரிய மரியாதை வழங்கப்படாமல், ஆளுநர் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், தாய்மொழி தமிழைப் பின்தள்ளியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். அதோடு, தமிழ்நாட்டின் நடைமுறையில் இல்லாத வந்தே மாதரம் பாடலை முதலாவதாகத் திணிக்கப்பட்டு இசைத்ததும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் கோரிக்கையல்ல. அது தமிழர் இனத்தின் அடிப்படை உணர்வும் உரிமையும் ஆகும். மொழியை மதிக்காத ஆட்சி, மக்களின் மனதை மதிக்காத ஆட்சியாகவே பார்க்கப்படும்.

அதோடு, இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதை தொடர்பான அரசின் பாரம்பரிய நடைமுறைகள், எந்தச் சூழலிலும் மீறப்படாதவாறு உறுதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Read Entire Article