கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
15
Image Credit :
Asianet News
கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியா வருகை
இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சியடைவதாக அனிதா ஆனந்த் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார்.
25
ஜெய்சங்கரைச் சந்தித்த அனிதா ஆனந்த்
அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், இன்று (திங்கட்கிழமை) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளைச் சேர்ந்த அரசுப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், "இரு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் மக்களின் நலன்களைப் பூர்த்தி செய்யும் விதமாக, இந்தியா - கனடா நாடுகளின் ஒத்துழைப்பை மீண்டும் கட்டமைக்க வேண்டும். வணிகம், முதலீடு, வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு), முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன," என்று குறிப்பிட்டார்.
35
அனிதா ஆனந்த் மகிழ்ச்சி
கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பேசுகையில், "நமஸ்தே. இன்று எங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு மிக்க நன்றி. இன்று இந்தியா - கனடா உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கனஸ்கிஸில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை வரவேற்றதில் எங்கள் பிரதமர் கார்னி மகிழ்ச்சியடைந்தார். அந்தச் சாதகமான நிகழ்வே, இன்று நாம் இங்கு நடத்தும் பேச்சுவார்த்தைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது." என்றார்.
மேலும், "இந்தியா-கனடா கூட்டு அறிக்கையைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம். இது முழுமையானதாகவும், பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. இந்தக் கூட்டு அறிக்கை இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான பரஸ்பர திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நமது பரஸ்பர முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். சில வாரங்களுக்கு முன்பு இங்கு பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பாக எங்கள் அதிகாரிகள் நடத்திய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்தப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் உணர்ந்துள்ளன," எனக் குறிப்பிட்டார்.
45
Image Credit :
Asianet News
அனிதா ஆனந்த் - மோடி சந்திப்பு
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அனிதா ஆனந்த், பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளைப் பற்றி விவாதித்தார்.இந்தச் சந்திப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"அனிதா ஆனந்த்தை வரவேற்ற பிரதமர் மோடி, அவரது வருகை, இருதரப்பு உறவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றபோது அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னியை சந்தித்ததை மோடி நினைவுகூர்ந்தார். வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறிய பிரதமர், வரும் காலங்களில் கனடா பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
55
அனிதா ஆனந்த் பின்னணி என்ன?
கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஒரு கனேடிய வழக்கறிஞர், கல்வியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது கனடா வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார். இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர் உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
அனிதா ஆனந்த் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர்கள் இருவரும் இந்தியாவில் இருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்த மருத்துவர்கள். அவரது தந்தை திரு. எஸ்.வி. ஆனந்த் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது தாய் திருமதி. சரோஜ் டி. ராம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இந்த வகையில்தான் அனிதா ஆனந்துக்கு தமிழ்நாட்டுடன் பாரம்பரியப் பிணைப்பு உள்ளது. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு முக்கியப் பெண் அரசியல்வாதியாகவும், கனடா மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் இந்துப் பெண் என்ற பெருமையையும் பெற்றவர் ஆவார்.